மதுரை, ஆக. 11:
அப்பள உற்பத்தியாளர்கள் மீது போட்ட, வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வடகம், மோர்வத்தல், அப்பளம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலசங்கத்தின் மாநில செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.
மதுரை அனுப்பானடியில், அப்பள தொழில் எதிர்காலம் பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் திருமுருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாசம் வாழ்த்தி பேசினார். இதில் மாநில செயலாளர் திருமுருகன் பேசுகையில், வடகம் மற்றும் அப்பள தொழில், ஜெய்ஹிந்த்புரம், அனுப்பானடி, சிந்தாமணி போன்ற பகுதிகளில் குடிசை தொழிலாக நடந்து வருகிறது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேர் இதனை நம்பி உள்ளனர். தற்போது அப்பளம் தயாரிப்பாளர்களை பாதிக்கும் வகையில், உணவு பாதுகா ப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில், அப்பளத்தில் சமையல் சோடா, உப்பு கலக்க கூடாது என கூறப்பட்டுள்ளது. இதனால், அப்பள தொழில் நலிவடையும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவரும் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார். மேலும் அப்பளத்தில் சோ டாவிற்கு மாற்று ஏற்பாடு செய்து வருகின்றனர். அதுவரைக்கும் கபெனிகள் மீது வழக்குகள் போடக்கூடாது. போட்ட வழக்குகளையும் உடனடியாக மாநில அரசு வாபஸ் பெற வேண்டும். 150 வருடமாக அப்பளத்தில் சோடா உப்பு பயன்படுத்தி வருகிறோம் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இதில் பாதிப்பு உள்ளது என தவறாக பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் பிச்சை, சண்முகவேல், கமல்குமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment