ஆத்தூர்: சேலம், கலெக்டர் அலுவலகத்தில், இன்று கலெக்டர் தலைமையில், சேகோ ஆலை உரிமையாளர்களுடன், முத்தரப்பு கூட்டம் நடக்கிறது.
சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்பட, 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, நாமக்கல், ராசிபுரம் பகுதியில் உள்ள, 400க்கும் மேற்பட்ட சேகோ பேக்டரிகளில் அரவை செய்து, ஸ்டார்ச், ஜவ்வரிசி என, உற்பத்தி செய்யப்படுகிறது.
ஜவ்வரிசி, வட மாநிலங்களில் உணவாகவும், மருந்து தயாரிப்புக்கு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆத்தூர் பகுதியில் உள்ள, சேகோ பேக்டரிகளில், 30 சதவீதம் மரவள்ளி கிழங்கு மாவுடன் (ஸ்டார்ச்), 60 சதவீதம் மக்காச்சோள மாவு கலந்து தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்கின்றனர்.
ஜவ்வரிசி தரம் பாதிக்கப்படுவதுடன், உடல் உபாதைகளும் ஏற்படுவதாக புகார் சென்றது. இதையடுத்து, கடந்த, மார்ச், 4ம் தேதி, மாவட்ட கலெக்டர் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடந்தது. தொடர்ந்து, 13 பேர் கொண்ட குழு அமைத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில், ஜவ்வரிசி உற்பத்தியில், கலப்படத்தை தவிர்க்க, விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்களுடன், மீண்டும் முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். என, ஆத்தூர் பகுதி விவசாயிகள், மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர். அதையடுத்து, இன்று மாலை, 4.30 மணிக்கு, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் மகரபூஷணம் தலைமையில், முத்தரப்பு கூட்டம் நடக்கிறது. விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment