Jun 3, 2014

கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த ஒரு டன் மாம்பழங்கள் பறிமுதல்


சிதம்பரம், ஜூன் 3:
சிதம்பரத்தில் ரசாயன கல் வைத்து பழுக்க வைத்த ஒரு டன் மாம்பழத்தை உணவு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
மாம்பழம் சீசன் என்பதால் பழக்கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. மாம்பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா, வட்டார அலுவலர்கள், பத்மநாதன், குணசேகரன், பழனிவேல், அருண்மொழி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சிதம்பரம் மேலவீதியில் உள்ள பழக்கடைகளில் அதி ரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது மேலவீதி வணிக வளாகத்தில் இருந்த பழ குடோனில் மாம்பழங்களை பழுக்க வைக்க கார்பைடு கல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ஒரு டன் எடையுள்ள மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். மேலும் மாம்பழங்களை பழுக்க வைக்க வைத்திருந்த கார்பைடு கல் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை நகராட்சி குப்பை டிராக்டர் மூலம் ஏற்றிச்சென்று குப்பையில் வீசப்பட்டது.
இது குறித்து மாவட்ட உணவு அதிகாரி ராஜா கூறுகையில்: பல இடங்களில் மாம்பழங்களில் ரசாயன கல் வைத்து பழுக்க வைப்பதாக தகவல் வந்துள்ளது. கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டுள்ள மாம்பழங்களை உண்டால் வாந்தி, தலைவலி, வயிற்றுவலி ஆகியவை ஏற்படும். ஆகையால் மாவட்டம் முழுவதிலும் தீவீர ஆய்வு செய்து கல் வைத்து மாம்பழங்கள் பழுக்கவைக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment