சென்னை, ஜூன் 18:
ஜெய்ப்பூர்&சென்னை சென்ட்ரல் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 10 மணிக்கு சென்ட்ரலின் 4வது நடைமேடைக்கு வந்தது. சரக்குகள் வைக்கும் பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை ரயில்வே போலீசார் இருவர் கண்டுபிடித்தனர். உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அங்கு வந்த இன்ஸ்பெக்டர்கள் அழகர்சாமி, புருஷோத்தமன், சப்இன்ஸ்பெக்டர்கள் சுப்பையா, நடராஜன் ஆகியோர் ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் பெட்டியை திறந்தனர். அதில் 48 பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பெட்டிகளை திறந்து பார்த்தபோது ஒவ்வொரு பெட்டியிலும் தோலுரிக்கப்பட்ட முழு ஆடுகள் 2, 3 வைக்கப்பட்டிருந்தன.
மேலும் அந்த ஆட்டிறைச்சியில் அனுப்பப்பட்ட இடத்தின் சுகாதார அதிகாரி அளித்த முத்திரைகள் ஏதுமில்லை. மேலும் இறைச்சியை ரயிலில் கொண்டு வருவதற்கான பாதுகாப்பு விதிமுறையும் கடைபிடிக்கப்படவில்லை. கறியின் எடைக்கு ஏற்ப 2 மடங்கு ஐஸ் கட்டிகளை வைக்க வேண்டும். அதுவும் செய்யப்படவில்லை. இதனால் ஆட்டிறைச்சி கெட்டுப்போய் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது.
ரயிலில் கொண்டு வரப்பட்ட ஆட்டிறைச்சி சென்னையில் சிந்தாதரிப்பேட்டையில் உள்ள கடைகளுக்கு அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து நகரின் நட்சத்திர ஓட்டல்கள் உட்பட பல்வேறு ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படும். யார் பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது, அனுப்பியவர் யார், ஜெய்ப்பூரில் இருந்து அனுப்பப்பட்டதா இல்லை இடையில் ஆந்திராவில் இருந்து அனுப்பப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
மொத்தம் 48 பெட்டிகளில் இருந்த இறைச்சிகளின் எடை 3.3 டன். இதன் மதிப்பு சுமார் 15 லட்ச ரூபாய். பின்னர் அவற்றை சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மீனாட்சிசுந்தரம், கமல்உசேன், ரவி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதனை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்றனர். அங்கு இறைச்சியுடன் வேதிப்பொருட்களையும் கலந்து ஆழக் குழிவெட்டி புதைத்தனர்.
No comments:
Post a Comment