சென்னை, மே 27 :
கோயம்பேட்டில் வியாபாரி ஒருவரது வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த ஒன்றரை டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்.
கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்படும் மாம்பழத்தை சாப்பிடுவதால் வயிற்று வலி, வாந்தி, பேதி மற்றும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. புற்று நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கார்பைடு கற்களால் பழுக்க வைத்து மாம்பழம் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் அடிக்கடி சோதனை நடத்தி குடோன்களில் கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். இதனால் மார்க்கெட்டில் வைக்காமல், வீடுகளில் பதுக்கி வைத்து இந்த செயலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
இப்படி கோயம்பேடு அவ்வை திருநகர் 3வது தெருவில் வியாபாரி ஒருவரது வீட்டில் கால்சியம் கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைப்பதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் 10வது மண்டல நல அலுவலர் டாக்டர் ராஜ்குமார் தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று காலை அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 1500 கிலோ மாம்பழம் மற்றும் அதற்கு பயன்படுத்திய 30 கிலோ கால்சியம் கார்பைடு கற்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மாம்பழங்களை லாரியில் ஏற்றிச் சென்று, பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனர்.
கார்பைடு கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இத்தகைய மாம்பழங்களை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment