May 14, 2014

தொடரும் "கார்பைடு கல்' மாம்பழ விற்பனை: ஆபத்தை உணராத பொதுமக்கள்


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள மாம்பழங்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டில் மாங்காய்களை பழுக்க வைக்க பெட்டியில் அடுக்கி வைக்கும் பணியார்கள்கள்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் பொருள்படுத்தாமல், தொடர்ந்து கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். 
இது போன்ற ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உண்பவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 
மாம்பழங்களில் மல்கோவா, செந்துறை, பங்கணப்பள்ளி, நீலம், ஒட்டு உள்ளிட்டவற்றை பலரும் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
மாம்பழத்தில் உள்ள சத்துக்களும் ஏராளம். அதே நேரத்தில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மக்களின் உடல் நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய மாம்பழ சீசன் விற்பனை இப்போது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான மாம்பழங்கள், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகின்றன. 
தினந்தோறும் 100 டன் முதல் 150 டன் வரையிலான மாம்பழங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இங்கு கொண்டு வரப்படும் மாம்பழங்கள் அனைத்தும் பழுக்காத நிலையில், காயாகத்தான் வருகின்றன. அதைத் தொடர்ந்து, கார்பைடு கல் வைக்கப்பட்டு அந்த மாங்காய்கள் அனைத்தும் பழுக்க வைக்கப்படுகின்றன. காயாக வரும் அவற்றை அப்படியே சிறு சிறு பெட்டிகளில் அடுக்கி கார்பைடு கல் சேர்த்து வைத்து விடுகின்றனர். பின்னர் இரண்டு நாள் கழித்து பழமாக மாறிய உடன் அது விற்பனை செய்யப்படுகிறது. கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அவை உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்கின்றனர் டாக்டர்கள். 
இது குறித்து சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை பொது மருத்துவ டாக்டர் ரகுநந்தன் கூறியது: கார்பைடு கல் என்பது மனித உடலுக்கு ஒவ்வாத பொருளாகும். இதனால், ஒவ்வாமை போன்றவை எற்படுவதுடன் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 
அதேபோல், கார்பைடு கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு மற்றும் மன நிலை பாதிப்பு போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. 
இப்போது கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களுக்கும், சாதாரண பழத்திற்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுதான் சிறந்தது என்றார் டாக்டர் ரகுநந்தன். 
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அதிகாரி லஷ்மி நாராயணன் கூறியது: மாம்பழ சீசன் தொடங்கியதிலிருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இது வரை 6 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளன. இதில், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2,500 கிலோ எடையுள்ள மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு, பாதுகாப்பாக அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்த மாம்பழம் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் கார்பைடு கல், சுமார் 150 கிலோ எடை வரை கைப்பற்றப்பட்டுள்ளது. 
இதை தொடர்ந்து, அங்குள்ள வியாபாரிகளுக்கு கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன என்றார்.
இது போன்று எச்சரிக்கை விடுத்தாலும் கார்பைடு கல்லைக் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோர் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

கண்டறிவது எப்படி?
கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கும் சாதாரணமாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிய உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சில யோசனைகளை கூறியுள்ளனர். அவற்றின் விவரம்:

"கார்பைடு' பழத்தின் வெளியே தெரியும் வித்தியாசங்கள்:
1. வெளித் தோற்றத்துக்கு மாம்பழம் முழுவதும் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
2. மாம்பழத்தின் மீது சாம்பல் பூத்தது போல் இருக்கும்.
3. பழத்தின் தோலில் சிறு சிறு கரும்புள்ளிகள் இருக்கும்.

"கார்பைடு' பழத்தின் உள்ளே தெரியும் வித்தியாசங்கள்: 
1. பழத்தின் உள்ளே சதைப்பகுதியின் மேல் மஞ்சள் நிறத்திலும், உள்பகுதியில் வெள்ளை அல்லது லேசான மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
2. சுவை குறைவாக இருக்கும்.
3. பழத்தில் சாறு குறைவாக இருக்கும்.

No comments:

Post a Comment