பழநி, ஏப். 10:
பழநியில் பா க்கெட் தண்ணீர் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உணவு பாதுகாப்பு அலுவலர் மோகனரங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பழநி கோயிலில் வருடம் முழுவதும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்த சஷ்டி என் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் சாதாரண நாட்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் பழநி நகருக்கு வருவர். இவ்வாறு வரும் பக்தர்களிடம் விற்பனை செய்வதற்காக ஏராளமான சிறு கடைகள் பழநி நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போதிய மழை இல்லாததால் பழநி நகரில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தற்போது கடைகளில் முறையான அனுமதி பெறாமல், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பாக்கெட் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட் ஒன்று ரூ.3க்கு விற்பனை செய்யப்படுவதால் பக்தர்கள் பாட்டில் தண்ணீருக்கு பதிலாக பாக்கெட் தண்ணீரையே அதிகளவு பயன்படுத்துகின்றனர். அதுபோல் டாஸ்மாக் பார்களிலும் பாக்கெட் தண்ணீர் விற்பனை அதிகளவு நடக்கிறது. இதுபோன்ற சுகாதாரமற்ற குடிநீரை உபயோகிப்பதால் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து பழநி உணவு பாதுகாப்பு அலுவலர் மோகனரங்கத்திடம் கேட்டபோது , ‘பழநி நகரில் பாக்கெட் தண்ணீர் விற்பனைக்கு தடை உள்ளது. கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, இதுபோன்ற தண்ணீர் பாக்கெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வாரம் நடந்த சோதனையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன’ என்றார்.
No comments:
Post a Comment