சேலம், பிப்.2:
தமிழகம்
முழுவதும் உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டல், மளிகை கடைகள், குடிநீர்
விநியோகம் செய்யும் நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு மற்றும்
தரநிர்ணயச்சட்டத்தின் கீழ் லைசென்ஸ் மற்றும் பதிவு சான்றிதழ் பெற நாளை
மறுநாளுடன் (4ம் தேதி) காலகெடு முடிகிறது. லைசென்ஸ் பெறாத நிறுவனங்கள் மீது
ரூ.5 லட்சம் அபராதம், 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று உணவு
பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்திய
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் நாடு முழுவதும் 2011ம் ஆண்டு
ஆகஸ்ட் 5ம் தேதி அமலுக்கு வந்தது. வாடிக்கையாளர்களுக்கு கலப்படம் இல்லாமல்,
சுகாதாரமான முறையில் உணவு வழங்குவது இந்த சட்டத்தின் நோக்கமாகும். உணவு
பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சிறிய, பெரிய
வணிகர்கள் அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலரிடம் பதிவு
செய்து, லைசென்ஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருமண
மண்டப உணவுக்கூடங்கள், ஓட்டல்கள், மளிகை கடைகள், சாலையோர தள்ளுவண்டி
கடைகள், பால்காரர்கள், இறைச்சி விற்பனையாளர்கள், பள்ளி, கல்லூரி உணவு
விடுதிகள், சமையல் கான்ட்ராக்டர்கள், ஸ்டார்ச், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள்,
பேக்கரிகள், உள்ளிட்ட உணவுப்பொருள் தயாரிப்பில் உள்ள அனைத்து உணவு
வணிகர்களும் உணவுப்பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்
என்று அரசு உத்தரவிட்டது.
ஆண்டுக்கு ரூ.12
லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் மாவட்ட நியமன அலுவலரிடம்
லைசென்ஸ் பெற வேண்டும். ரூ.12 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் செய்யும்
வணிகர்கள், அந்தந்த ஒன்றியங்களில் உள்ள உணவு அதிகாரிகளிடம் விண்ணப்பம்
செய்து பதிவு செய்தால் மட்டும் போதுமானது. இவர்கள், லைசென்ஸ் பெற
தேவையில்லை. இதில் உணவு நிறுவனங்களை பதிவு செய்ய ரூ.100ம், லைசென்ஸ் பெற
ரூ.2 ஆயிரமும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று உள்ளது.
இந்த
சட்டத்தை எதிர்த்து கடந்தாண்டு வணிகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர். அந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு ஆண்டுக்குள் உணவகங்கள் மற்றும்
கடைகள் பதிவு சான்றிதழ் மற்றும் லைசென்ஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் பதிவு சான்றிதழ் மற்றும்
லைசென்ஸ் பெற்று வருகின்றனர். இந்த லைசென்ஸ் பெற நாளை மறுநாள்(பிப்.4ம்
தேதி) கடைசி நாளாகும்.
இதுகுறித்து உணவு
பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது:
சேலம் மாவட்டத் தில் சிறிய மற்றும் பெரிய அளவில் 28 ஆயிரம் உணவு
நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில், இதுவரை ரூ.12 லட்சத்துக்கு மேல்
வணிகம் செய்து வரக்கூடிய 3100 நிறுவனங்கள் பதிவு செய்து லைசென்ஸ்
பெற்றுள்ளன. 18 ஆயிரம் சிறு உணவு நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெற்றுள்ளன.
அரசு
கல்லூரிகளில் இயங்கும் உணவு விடுதிகள், ரேஷன் கடைகள், சிவில் சப்ளைஸ்
கிடங்கு, கோயில்கள் ஆகியவை 100 சதவீதம் முறைப்படி பதிவு செய்துள்ளன. 40
சதவீத தனியார் நிறுவனங்கள் இன்னும் பதிவு சான்றிதழ் மற்றும் லைசென்ஸ்
பெறவில்லை. உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் நாளை மறுநாள்
(பிப்.4ம் தேதி)க்குள் லைசென்ஸ் மற்றும் பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.
சேலம்
மாவட்டத்தில் ஆத்தூர், இடைப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட நகராட்சியிலும்,
மேச்சேரி, நங்கவள்ளி, மகுடஞ்சாவடி, ஓமலூர் உள்பட 20 ஒன்றியங்களிலும் பதிவு
மற்றும் லைசென்ஸ் பெற அலுவலர்கள் உள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும்
அந்தந்த ஒன்றியங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளனர். அவர்களிடம்
விண்ணப்பம் செய்து லைசென்ஸ் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு டாக்டர் அனுராதா கூறினார்.
6 மாதம் சிறை தண்டனை உண்டு
விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி
ஒரு ஆண்டு அவகாசம் தேவை
இது
குறித்து சேலம் சில்லரை மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி
கூறுகையில், ‘‘அரசு உணவு பாதுகாப்பு தரநிர்ணயச்சட்டத்தை முழுமையாக மாற்றி
அமைக்கவேண்டும். தற்போது இச்சட்டத்தின் கீழ் பதிவு மற்றும் உரிமம் எடுக்க
காலஅவகாசம் பிப்.4ம் தேதி வரை உள்ளது. இச்சட்டத்தில் முழுமையான மாற்றங்கள்
செய்யாத வரை இச்சட்டத்தை அமுல்படுத்தக்கூடாது.
தற்போது
உள்ள காலவரம்பை மேலும் ஒரு வருடம் நீட்டிக்க வேண்டும். இது சம்பந்தமாக
எங்கள் பேரமைப்பினர் கடந்த டிசம்பர் 10ம் தேதி டில்லியிலும், ஜனவரி 10ம்
தேதி சென்னையிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தை
சந்தித்து மனு அளித்துள்ளோம். அவர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக
கூறியுள்ளார்.
தமிழகத்தில் உணவு பாதுகாப்பு
அதிகாரிகள் பதிவு மற்றும் லைசென்ஸ் எடுக்கவில்லை என்றால் ரூ.5 லட்சம்
அபராதம், 6 மாத சிறைத்தண்டனை என்று நோட்டீஸ் அளித்துள்ளனர். சட்டத்தில்
முழுமையான மாற்றங்கள் செய்யவும் வரை மேலும் ஒரு வருட கால நீட்டிப்பு செய்ய
வேண்டும்,” என்றார்.
ரூ.2 ஆயிரம் கட்டணம் அதிகம்
இது
குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது: வாடிக்கையாளர்களுக்கு தரமான
உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என எங்களுக்கும் எண்ணம் உள்ளது. ஆனால், உணவு
பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளை மாற்றி அமைக்க வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டல்கள் பதிவு செய்து லைசென்ஸ் பெற ரூ.2 ஆயிரம்
கட்டணம் செலுத்த வேண்டும். இதை மூன்று ஆண்டுக்கு ஒருமுறை லைசென்ஸ் பெறும்
வகையில் திருத்தம் செய்ய வேண்டும்.
லைசென்ஸ்
கட்டணத்தை சிறு ஓட்டல்களுக்கு ரூ.500 ஆகவும், பெரிய கடைகளுக்கு ரூ.1000
ஆகவும் குறைக்க வேண்டும். அபராதம், சிறை தண்டனை என்பது வணிகர்களை
மிரட்டுவது போல் உள்ளது. இச்சட்டத்தை மாற்றி அமைக்கும் வரை லைசென்ஸ்
மற்றும் பதிவு செய்ய மேலும் ஒரு ஆண்டு காலம் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு
ஓட்டல் உரிமையாளர்கள் கூறினர்.
No comments:
Post a Comment