Feb 1, 2014

உணவகங்கள், கடைகள் உரிமம் பெற வரும் 4ம் தேதி கடைசி நாள் மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்

தர்மபுரி,பிப்.1:
உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் கடைகள் பதிவு சான்றிதழ், உரிமம் பெறுவதற்கு பிப்ரவரி 4ம் தேதியோடு காலக்கெடு முடிக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. 
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தினேஷ் கூறியதாவது: இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் நாடு முழுவதும் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அமலுக்கு வந்தது. நுகர்வோருக்கு, கலப்படமற்ற, சுகாதாரமான உணவு வழங்குவது இச்சட்டத்தின் நோக்கம். உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சிறு, பெரு வணிகர்கள் அந்தந்த மாவட்ட உணவுப் பாது காப்பு நியமன அலுவலரிடம் பதிவு செய்து, லைசென்ஸ் பெறுவது கட்டாயம். 
இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து கடந்தாண்டு வணிகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு ஆண்டுக்குள் உணவகங்கள் மற்றும் கடைகள் பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெறவேண்டும் என்று உத்தரவிட்டது. 
இதன்படி, தமிழகம் முழுவதும் பல ஆயிரம் வணிகர்கள் பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெற்று வருகின்றனர். இந்த உரிமம் பெற வரும் பிப்ரவரி 4ம் தேதி கடைசி நாளாகும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், பால்காரர்கள், இறைச்சி விற்பனையாளர்கள், பள்ளி, கல்லூரி உணவு விடுதிகள், சமையல் காண்ட்ராக்டர்கள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட உணவு பொருள் தயாரிப்பு மற்றும் சாப்பிடும் நிலை வரை உள்ள அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்வோர், மாவட்ட நியமன அலுவலரிடம் லைசன்ஸ் பெற வேண்டும். அதற்கு குறைவாக வியாபாரம் உள்ள வணிகர்கள், தாங்கள் தொழில் நடத்துவது குறித்து பதிவு செய்தால் மட்டும் போதுமானது. இவர்கள், லைசென்ஸ் பெற தேவையில்லை. உணவு நிறுவனங்களை பதிவு செய்ய ரூ.100ம், உரிமம் பெற ரூ. 2 ஆயிரமும் கட்டணம் செலுத்த வேண்டும். 
தர்மபுரி மாவட்டத்தில் உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் வரும் பிப்ரவரி 4ம் தேதிக்குள் நியமன அலுவலர் அல்லது அந்தந்த வட்டாரத்தில் உள்ள பொறுப்பு அலுவலரிடம் பதிவு சான்றிதழ், உரிமம் பெற வேண்டும். பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெறாமல் உணவு வணிகத்தில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். 
இவ்வாறு நியமன அலுவலர் டாக்டர் தினேஷ் கூறினார். 
உரிமம் பெறும் இடங்கள் 
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகம், அரசு மருத்துவமனை பின்புறம் வெண்ணாம்பட்டி ரோட்டில் உள்ள மருந்து குடோன் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை 04342&230385, 94439&25926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தர்மபுரி நகராட்சி: 97886&77771, தர்மபுரி ஒன்றியம்: 94425&46733, நல்லம்பள்ளி 94430&54715, காரிமங்கலம்; 94439&82426, பாலக்கோடு: 94867&10983, மொரப்பூர்: 94425&22681, அரூர், பாப்பிரெட்டிபட்டி: 94890&26252, பென்னாகரம்: 91507&45339 உள்ளிட்ட 8 ஒன்றியங்களிலும் சம்பந்தப்பட்ட எண்களில் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment