ஓட்டலில் வாங்கிய குளிர்பானத்தில் புழு நெளிந்ததால் மாநகராட்சி அதிகாரிகளிடம் சமூக சேவகி புகார் செய்தார். உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி காலாவதியான குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குளிர்பான பாட்டிலில் புழு கிடந்தது பற்றி அதை வாங்கிய ‘எக்ஸ்னோரா’ நிறுவனத்தின் பொதுச் செயலாளர் நிஷா கோட்டா கூறியதாவது:
மெரினா கடற்கரையில் காந்தி சிலை பின்புறம் ஒரு ஓட்டல் உள்ளது. ராணி மேரி கல்லூரி நிகழ்ச்சிக்கு குழு உறுப்பினர்களுடன் வந்திருந்த நான், குளிர்பானம் குடிக்க அந்த ஓட்டலுக்கு சென்றேன். ரூ.15 கொடுத்து குளிர்பானம் வாங்கினேன். பாட்டிலுக்குள் ஏதோ நெளிவதுபோல இருந்தது. அருகே கண்ணை வைத்துப் பார்த்தேன். பாட்டிலுக்குள் புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன.
அதிர்ச்சி அடைந்து கடைக்காரரிடம் கேட்டேன். ‘நாங்கள் வாங்கி விற்பதோடு சரி. குளிர்பான ஏஜென்ட்தான் இதற்கு பொறுப்பு. அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என்று கூறி, குளிர்பான ஏஜென்ட் சுரேஷ் என்பவரின் டெலிபோன் எண்ணைக் கொடுத்தார். அவரை தொடர்பு கொண்டு கேட்டேன். அவரோ, “பாட்டில் குளிர்பானங்கள் எல்லாமே இப்படித்தான் இருக்கும். நாங்கள் ஒவ்வொரு பாட்டிலாகப் பார்த்தா வியாபாரம் செய்ய முடியும். உங்களை யார் வாங்கி குடிக்க சொன்னது” என்று பொறுப்பில்லாமல் பேசினார்.
உடனடியாக சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் குகானந் தத்தை தொடர்புகொண்டு, நடந்த விவரங்களை கூறினேன். அடுத்த சில நிமிடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 4 பேர் அங்கு வந்தனர். கடையில் சோதனை நடத்தி, காலாவதியான குளிர்பான பாட்டில்களை கைப்பற்றிச் சென்றனர்.
குளிர்பான பாட்டிலை வாங்கிய போதே, மூடி துருப்பிடித்து இருப்பதைப் பார்த்து கடைக்காரரிடம் கேட்டேன். ‘கடல் காற்றில் எல்லா குளிர்பான மூடிகளும் ஒரே மாதத்தில் துருப்பிடித்து விடும்’ என்று சர்வசாதாரணமாக கூறுகிறார். மூடியைத் திறக்கும் போது துரு உள்ளே விழுந்தால், அருந்துபவர்களுக்கு வயிற்று வலி உள்பட பல உபாதைகள் ஏற்படும். பொது மக்களின் உடல்நலத்தில் வியாபாரிகளுக்கும் பொறுப்பிருக்கிறது. அவர்கள் லாபத்தை மட்டுமே நினைக்க கூடாது. பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் இதுபோன்ற தவறுகளைத் தடுக்க முடியும். இவ்வாறு நிஷா கூறினார்.
நீங்களும் புகார் செய்யலாம்
உணவுப் பொருட்கள் தரம் குறைந்திருந்தாலோ, கெட்டுப் போயிருந்தாலோ, பூச்சிகள், குப்பைகள் அல்லது வேறு ஏதா வது கிடந்தாலோ 9444042322 என்ற எண்ணில் உணவு பாதுகாப்பு துறையினரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்.
No comments:
Post a Comment