சென்னை, ஜன.16:
மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள கடைகளில் விற்கப்படும் பொருட்கள் சுகாதாரமற்று இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து கடற்கரையில் உள்ள 500க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கடைகளில் 10க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் அதிரடி ஆய்வு நடத்தினர்.
இதில் மீன், ஃபாஸ்ட் புட் கடைகள், சிறு உணவு பொருட்கள் விற்கும் கடைகள் , ஐஸ் கிரீம், குளிர் பானங்கள், குடிநீர், உணவு தயாரித்த எண்ணெய் ஆகிய மாதிரிகளை எடுத்து சென்றனர். தரமற்ற பொருட்களை விற்கும் கடைக்காரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அதிகாரிகள் பொதுமக்கள் தரமான உணவுகளை வாங்கி உண்ண வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடைக்காரர்கள் ஒரு தடவை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த கூடாது இதனால் அந்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தும்போது ரசாயன மாற்றம் ஏற்பட்டு புற்று நோய் வரக்காரணம் ஆகிவிடும். ஆகவே சுகாதாரமான முறையில் உணவு பண்டங்களை தயாரித்து விற்பனை செய்யவேண்டும். சுகாதாரமான தண்ணீரை பருக வேண்டும். கடற்கரை மணலில் தோண்டி விற்பனை செய்யப்படும் குடிநீர் மலிவாக கிடைக்கிறதே என்பதற்காக பொதுமக்கள் அதை அருந்த வேண்டாம். அதில் கிருமிகள் இருக்கலாம், அது உடல் நலத்தை பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment