Jan 2, 2014

உப்பு, ரொம்ப தப்பு... அயோடின் உப்பு, ரொம்ப ரொம்ப தப்பு! உங்கள் தட்டில் உணவா... விஷமா?

னித உடலின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இன்னொரு உணவுப் பொருள், சோடியம் எனப்படும் உப்பு.
ஆதிமனிதன் வேட்டையாடி விலங்குகளின் மாமிசத்தையும் ரத்தத்தையும் உணவாக உண்டான். உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான சோடியம், விலங்குகளின் ரத்தத்தின் மூலமாகவே அவனுக்குக் கிடைத்தது. பிறகு, விவசாயம் செய்து உணவு உண்ண ஆரம்பித்தபோதுதான் உப்பைத் தேடி, சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தான்! இன்றைக்கு, இந்த உப்பே, அவனுக்கு எமனாகும் அளவுக்கு வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது... சோகம்தான்! 
உப்பின் உற்பத்தி ஸ்தானம் கடல் நீர்தான். கடலில் மூழ்கி, பின்னர் உயிர்பெற்று எழுந்த மலைகளிலும், மலையடிவாரங்களிலும் உப்பு கிடைக்கும். பல யுத்தங்கள் உப்புக்காகவே நடந்திருக்கின்றன இந்த உலகில்! சாம்ராஜ்யங்கள் பல, உப்புக்காகவே சரிந்திருக்கின்றன! உலகப் புகழ்வாய்ந்த ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு, அந்த நாட்டு அரசன் விதித்த உப்புவரி, முக்கியக் காரணம். 
1930-ல் இந்தியாவில் நடந்தது என்ன? உப்பு, விலைமதிக்க முடியாத செல்வம் என்று உணர்ந்த ஆங்கிலேயர்கள், உப்பு வணிகத்தை தாங்களே மேற்கொண்டதோடு, உப்புக்கு வரியும் விதித்தனர். 'மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட நம் மக்களின் வாழ்வாதாரம் உப்புதான். அதில் கைவைக்க யாருக்கும் உரிமையில்லை’ என்று கொதித்தெழுந்த மகாத்மா காந்தி, சரித்திர முக்கியத்துவம் பெற்ற தண்டி யாத்திரையை மேற்கொண்டார். இந்த உப்பு சத்தியாகிரகம்தான், அன்றைய ஆங்கிலப் பேரரசின் ஆணிவேரை ஆட்டி வைத்தது என்பது சரித்திரம். 


இவ்வளவு அருமை பெருமையுடைய உப்பு, மனித ஆரோக்கியத்துக்குப் பெரிய வில்லனாக மாறியது மிக சமீபத்தில்தான். வேட்டையாடிய ஆதிமனிதன், விவசாயத்துக்கு மாறியபோது உணவில் சேர்த்தது... வெறும் 2 கிராம் உப்புதான். இப்போது சராசரி அமெரிக்கன் 10 கிராம், சராசரி இந்தியன் 12 கிராம் என உப்பை உட்கொள்கிறான். மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு, சிறுநீரக நோய்கள் தற்போது அதிகரித்ததன் காரணங்களில் இது மிகவும் முக்கியமானது. நாம் உட்கொள்ளும் உப்பை, சிறுநீரகங்கள்தான் வெளியேற்ற வேண்டும். சிறுநீரகங்கள் 5 கிராம் உப்பை மட்டுமே வெளியேற்ற முடியும். அப்படியானால் மீதம் உள்ள 7 கிராம்? 
ஒரு பங்கு உப்பை வெளியேற்ற, 23 பங்கு தண்ணீர் தேவை. செல்களின் உள்ளே உள்ள நீர் வெளியேறி, உப்பைக் கரைக்கிறது. ஆகவே, உடலில் நீரின் அளவு மிகுதியாகி வீக்கம், ரத்தக் கொதிப்பு, இதயம் செயல் இழப்பு போன்றவை விளைகின்றன. சோடியம், தன்னோடு கால்சியத்தையும் தக்க வைத்துக்கொள்ளும் - ஆகவே ரத்தக் குழாய் அடைப்புகள், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை உருவாகும். சில புற்றுநோய்களும் வரலாம். 
உடலுக்குத் தேவையான உப்பு, உணவில் இயற்கையாகவே இருக்கிறது. கனிமங்கள், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் போன்ற சுமார் 84 வகை ஊட்டச்சத்துக்கள் தினமும் நமக்குத் தேவை. இவற்றை 84 ஜாடிகளில் அடைத்து, சமையலறையில் வைத்திருக்கிறோமா..? நம் அன்றாட உணவில் இந்த 84 ஊட்டச்சத்துக்களையும் கலந்து வைத்த கடவுள், சோடியத்தை மட்டும் மறந்துவிட்டார் என்று நினைத்து, எப்போது சமையலறையிலும், இன்னும் போதாது என்று சாப்பாட்டு மேஜையிலும் வைத்து உப்பை நாம் உண்ண ஆரம்பித்தோமோ, அன்றுதான் மனிதனின் கெட்ட காலம் ஆரம்பித்தது! 'ரீஃபைனிங்’ என்கிற பெயரில் அரிசி, சர்க்கரை, பால் இதையெல்லாம் எப்படிக் கெடுத்தோமோ... அதேபோலதான் உப்பையும் கெடுக்க ஆரம்பித்தோம். 
கடல் நீரைத் தேங்க வைத்து, காயவைத்துக் கிடைக்கும் உப்பையே பெரும்பாலும் உபயோகித்தோம். இதைச் சுத்தம் பண்ணுகிறேன் பேர்வழி என்று, மனிதன் செய்த வேலைகள் பற்பல. நமக்கு இப்போது கிடைக்கும் உப்பு (Table salt), கெடுதல் விளைவிப்பதில் சர்க்கரைக்குக் கொஞ்சமும் சளைத்த தல்ல. முதலில் உப்புக் கரைசலை 1200oF-க்குக் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உப்பில் கலந்துள்ள 84 வகை தாதுப்பொருட்கள் அறவே வெளியேறி, வெறும் சோடியம் குளோரைடு மட்டுமே மிஞ்சுகிறது. அது வெள்ளையாக ஜொலிக்க வேண்டும் என்றும், கரடுமுரடாக இல்லாமல் சர்க்கரையைப்போல் இருக்க வேண்டும் என்றும், வெகுகாலம் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்றும் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் - டால்க், சிலிகான், அலுமினியம், ஃபுளோரைடு, கொஞ்சம் சர்க்கரைகூட - இவை அனைத்தும் உடலுக்குக் கேடுதான். 84 கனிம தாதுக்களுடன் உள்ள சோடியம் குளோரைடு கெடுதல் அல்ல - உடலுக்கு நல்லதுதான். ஆனால், அந்த 84 சத்துக்களும் நீக்கப்பட்ட சோடியம் குளோரைடு... மிகமிகக் கெடுதலானது (எல்லா சுத்திகரிப்புகளும் இப்படித்தானே..?!) 
எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது வந்துள்ள புதிய ஆபத்து... அயோடின் கலந்த உப்பு. உப்பில் இயற்கையாகவே அயோடின் உண்டு. அதைக் காய்ச்சி உறிஞ்சி எடுத்துவிட்டு, இப்போது அயோடின் சேர்க்கிறோம் என்று செயற்கையாகச் சேர்த்து, விலையைப் பத்து மடங்கு உயர்த்தி, கோடீஸ்வரர்களை... மேலும் கோடீஸ்வரர்களாக ஆக்கியதுதான் மிச்சம். 
தைராய்டு சுரப்பியிலிருந்து... தைராக்ஸின் ஹார்மோன் உற்பத்தியாவதற்கு அயோடின் தேவை. அது குறைவாக இருந்தால், உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி குறைவதுடன், கழுத்தில் தைராய்டு சுரப்பியில் வீக்கம் (Goitre) முதலிய குறைபாடுகள் தோன்றும். ஆகவே, அயோடின் மிக மிக அவசியம் - ஆனால், வெறும் 0.15 மி.கி. மட்டுமே. இந்த அளவு அயோடின் எல்லா காய்கறிகளிலும், பால், முட்டை அசைவ உணவிலும் இயற்கையாகக் கிடைக்கிறது. போதாக்குறைக்கு இயற்கையாகக் கிடைக்கும் உப்பிலும் கிடைக்கிறது. இதை மெனக்கெட்டு நீக்கிவிட்டு, நீக்குவதற்கும் காசு, மறுபடியும் சேர்ப்பதற்கும் காசு என்று உயர்த்தியது தேவையா? 
இதுதவிர, அயோடின் கலக்கும்போது, கூடவே பொட்டாசியம் குளோரைடு, சல்ஃபர், மெக்னிஷியம், ஃபுளோரைடு, பேரியம், ஸ்ட்ரோன்ஷியம் போன்ற வேதிப்பொருட்களும் கலந்துவிடுகின்றன. இவை தேவையே இல்லை. இயற்கையான அயோடின் நல்லது. செயற்கையான அயோடின்... உடலில் பல அழற்சிகளை உண்டாக்கும். 
நம் நாட்டில் 125 கோடி ஜனத்தொகையில் சுமார் 6 கோடி பேருக்கு மட்டுமே அயோடின் குறைபாடு உள்ளது. இதற்காக மீதமுள்ள 119 கோடி மக்களையும் அயோடின் உப்பு உண்ண வைத்து, பலருக்கு 'தைராய்டு மிகுதி' (Hyper thyroid) எனும் நோயை உண்டாக்கி வருவது உண்மை. இதன் விளைவாக, ரத்தக் கொதிப்பு மற்றும் இதயப் பிரச்னைகள் வருவதும் உண்மை. 
மகாத்மா காந்தி இப்போது இருந்திருந்தால், உப்பில் அயோடின் கலந்து, அதை விஷமாக்கி, அதன் மூலமாக கோடீஸ்வரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் அரசாங்கத்தை எதிர்த்து இன்னொரு உப்பு சத்தியாகிரகம் செய்து கொண்டிருப்பார்!

No comments:

Post a Comment