கூடலூர், டிச.16:
கூடலூர் பஜாரையொட்டிய ராஜகோபாலபுரத்தில் வியாபாரிகள், விவசாயிகள் சங்க கூட்டுறவு பால் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு பல பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் பசும்பால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பசும்பாலுடன், தனியார் பாக்கெட் பால் கலந்து விற்பனை செய்வதாக தொடர் புகார் எழுந்தது.
இதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் எடிசன் அற்புதராஜ் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அங்கு திடீர் ஆய்வு செய்தனர். இதில் 60 லிட்டர் பால், மொத்தம் 120 தனியார் பால் பாக்கெட் உடைத்து கேனில் நிரப்பப்பட்டு இருந்தது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து விசாரணை நடத்தினர்.
பால் தட்டுப்பாட்டுக்காக, இதுமாதிரி தனியார் பால் பாக்கெட்டுகள் கலந்து விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. மேலும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய, கேனில் இருந்த பாலின் மாதிரியை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். தனியார் பால் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பால் விற்பனை நிலையத்தில் பசும்பாலுடன், தனியார் பால் பாக்கெட்டை கலந்து விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.
No comments:
Post a Comment