Nov 23, 2013

ஆய்வுக்குச் சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு ஃபோனில் மிரட்டல்

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, சேகோ ஃபேக்டரியில், ஜவ்வரிசி, "சேம்பிள்' எடுக்கச் சென்ற, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலருக்கு, மிரட்டல் விடுக்கப்பட்டது.
சேலம், ஆத்தூர், ராசிபுரம், நாமக்கல் பகுதியில் உள்ள, 420க்கும் மேற்பட்ட சேகோ ஃபேக்டரிகளில், மரவள்ளி கிழங்கு அரவை செய்து, ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் உணவாக ஜவ்வரிசியும், மருந்து உள்ளிட்டவைகளுக்கு, ஸ்டார்ச் அனுப்புகின்றனர்.
ஜவ்வரிசி பாலிஷ் செய்வதற்கு, ஆஸிட் உள்ளிட்ட ரசாயன கலவை பயன்படுத்துவதால், ஜவ்வரிசி உட்கொள்பவர்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுவதாக, புகார் எழுந்தது. அதனால், சேகோ ஃபேக்டரிகளில், ஆய்வுப் பணி மேற்கொள்ளும்படி, மத்திய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டது.
அதன்படி, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், அம்மம்பாளையம், நரிக்குறவன் காலனி, முட்டல், பைத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, சேகோ ஃபேக்டரிகளில் ஆய்வு பணி மேற்கொண்டனர்.
மாலை, 6 மணியளவில், பைத்தூர் ரோட்டில் உள்ள, துøராஜ் என்பவரது சேகோ ஃபேக்டரியில், ஜவ்வரிசி சேம்பிள் எடுக்கச் சென்றனர். அப்போது, ஃபேக்டரி பணியாளர் மூர்த்தி, தனது ஓனர் பேசுவதாக கூறி, மொபைல் ஃபோனை, மாவட்ட நியமன அலுவலர் அனுராதாவிடம் கொடுத்தார்.
ஃபோனில் பேசிய சதாசிவம் என்பவர், மிரட்டல் விடுத்தபடி பேசியதால், மாவட்ட கலெக்டர் மற்றும் ஆத்தூர் இன்ஸ்பெக்டருக்கு, மாவட்ட நியமன அலுவலர் புகார் செய்தார். அதன்பின், போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் முன்னிலையில், ஜவ்வரிசி சேம்பிள் எடுத்துச் சென்றனர்.
உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் அனுராதா, கூறியதாவது:
ஜவ்வரிசியில், "ஆஸிட்' கலப்பதை தடுக்கும் வகையில், ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். இன்று (நேற்று முன்தினம்), துரைராஜ் என்பவரது சேகோ ஃபேக்டரிக்கு சென்றபோது, மொபைல் ஃபோனில், மற்றொரு சேகோ ஃபேக்டரி உரிமையாளர் சதாசிவம், என் குடும்பத்தை பற்றி இழிவு செய்து, மிரட்டல் விடுத்தார்.
தற்போது, மந்திரியுடன், ஏற்காட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கிறேன். விவசாயிகளை அழைத்து வந்து, போராட்டம் நடத்துவேன். நாமக்கல் மாவட்டத்தில், ஆய்வு செய்யாத நிலையில், விவசாயிகளை தற்கொலை செய்ய வைக்கிறீர்கள். என்னுடைய பத்து மில்லில், குறிவைத்து ஆய்வு செய்கிறீர்கள். மில்லை மூடினால், ஒரு மணி நேரத்தில், திறந்து விடுவேன் என்றார்.இதுப்பற்றி, மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்து, இன்ஸ்பெக்டர் முன்னிலையில், ஜவ்வரிசி, "சேம்பிள்' எடுத்து வந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment