பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு சாகும் கோழிகளை கிலோ ரூ.10க்கு வாங்கி, துண்டு துண்டாக வெட்டி, மாட்டிறைச்சி கலந்து, "மலிவு விலை சிக்கன்' என்ற பெயரில், கிலோ ரூ.30க்கு விற்பது, திருப்பூரில் அதிகரித்துள்ளது. சாலையோர சிறு ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் பிரியாணி, சில்லி சிக்கன், சிக்கன் பிரை ருசிப்போர் உஷாராக இல்லாவிடில், மருத்துவமனையில் "படுக்க வேண்டிய' அபாயத்துக்கு தள்ளப்படலாம்.
திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் 8.7 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் 2 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இங்குள்ள 4,500 பனியன் நிறுவனங்களில், ஏறத்தாழ 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தவிர, பனியன் உற்பத்தி சார்ந்த உபதொழில் நிறுவனங்களில் லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். பனியன் தொழிலாளர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். வாடகை வீடுகளில் தங்கி வேலைக்கு செல்பவர்கள். இவர்களின் அன்றாட உணவுத்தேவையை, சாலையோர சிறு ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள், ஆம்னிவேன் கடைகள் பூர்த்தி செய்கின்றன. இவை இட்லி, தோசை, பல வகை சாதம் மட்டுமின்றி, சிக்கன், மட்டன், பீப் பிரியாணி, சில்லி சிக்கன், சில்லி பிரை, பெப்பர் பிரை என்ற பெயரில், அசைவ உணவு வகைகளையும் விற்கின்றன.
மிகக்குறைந்த விலைக்கு, அதாவது, பிளேட் பிரியாணி ரூ. 15க்கும், சில்லி சிக்கன் போன்ற அயிட்டங்கள் பிளேட் ரூ.10க்கும் விற்கப்படுவதால், வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளின் அருகிலுள்ள தள்ளுவண்டி கடைகளில் கூட்டம் தள்ளுகிறது. இவ்வகை கடைகள் சிலவற்றில் சுகாதாரமான அசைவ உணவுகள் விற்கப்படுகின்றன. பல கடைகளில், உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான அசைவ உணவு வகைகள் விற்கப்படுகின்றன. சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் என்ற பெயரில் காக்கை கறியும், பண்ணையிலேயே செத்துப்போன கோழி கறியும் சமைக்கப்படுகின்றன. இவற்றை, திருப்பூர் மாநகராட்சி நகர்நல பிரிவு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வில் கண்டுபிடித்து, பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
75 கிலோ பறிமுதல்:
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், பண்ணையில் செத்து மடிந்த கோழிகளின் கறி, பார்சல் செய்யப்பட்டு விற்கப்படுவது குறித்த செய்தி, கடந்த 26ம் தேதி, "தினமலர்' நாளிதழின், திருப்பூர் "அக்கம் பக்கம்' இணைப்பில் வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி நகர்நல அலுவலர் செல்வக்குமார் தலைமையிலான குழுவினர், அங்கு சோதனை நடத்தி, 75 கிலோ "செத்த கோழி' கறி பாக்கெட்களை பறிமுதல் செய்து, திருப்பூர், வ.உ.சி., நகரைச் சேர்ந்த நந்தகோபால்,44, என்பவரை பிடித்து விசாரித்தனர். கோழிப்பண்ணைகளில் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது.
கிலோ ரூ.10:
திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலூர், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 5000 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, உற்பத்தியாகும் கோழிகளில், குறைந்தது 5 சதவீத கோழிகள் இடநெருக்கடி, நோய் பாதிப்பு, அதிக உணவு உட்கொள்ளுதல் உள்ளிட்ட காரணங்களால் செத்துவிடுகின்றன. இவற்றை பண்ணையாளர்கள், ஆழக்குழிதோண்டி புதைத்தழிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், சில பண்ணையாளர்கள் அவ்வாறு செய்யாமல், எடைபோட்டு, கிலோ 10 வீதம் விற்றுவிடுகின்றனர். அவ்வாறு விற்கப்பட்ட கோழிகளை வாங்கிய நந்தகோபால், ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் வைத்து சுத்தம் செய்து, அரை கிலோ, ஒரு கிலோ, இரண்டு கிலோ பாலித்தீன் "பிக்கப்' பைகளில் வைத்து, கிலோ ரூ.30க்கு டூ வீலரில் எடுத்துச் சென்று, தள்ளுவண்டிக் கடைக்காரர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். இவரைப்போன்று, திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர், செத்த கோழி வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதாக, திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் குறித்த தகவலையும், மாநகராட்சி நிர்வாகம் சேகரித்து வருகிறது.
ரூ. 10 ஆயிரம் அபராதம்:
திருப்பூர் மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் செல்வக்குமார் கூறியதாவது: இறந்து சில நாட்களான கோழிகளின் கறியுடன், மாட்டிறைச்சி கலந்து, பாக்கெட் போட்டு"சிக்கன்' என்ற பெயரில் விற்றுள்ளனர். இன்று(நேற்று) நடத்திய ஆய்வில் 75 கிலோ கறி பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, மாநகராட்சி எல்லைக்குள் நடந்த சோதனைகளின் மூலம் 550 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலான உணவு வகைகளை விற்போர் குறித்து தகவல் திரட்டி வருகிறோம். பிடிபடுவோர் மீது, "தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம்- 1939' ன்படி, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பிடிபடும் நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. அசைவ பிரியர்கள் முன்னெச்சரிக்கையுடன் உணவுகளை வாங்கி உண்பது நல்லது. பண்ணையில் பலியான கோழி மற்றும் கறியை விற்போர் குறித்து தகவல் அறிவோர், 94435 52519 என்ற எண்ணில் என்னையும், உணவு பாதுகாப்பு அலுவலரை 97881 12466 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உடன் நடவடிக்கை எடுக்க, தயாராக உள்ளோம்' என்றார்.
ருசித்தால் ஆபத்து!
திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் பிரியா கூறுகையில், ""நோய் வாய்ப்பட்டு இறந்த கால்நடைகள் மற்றும் கோழிகளின் கறியை உட்கொண்டால்,வயிற்றில் ஜீரண உபாதைகள் ஏற்படும். வயிற்றுப்போக்கு,வாந்தி ஏற்படவும் வாய்ப்புள்ளது. சுகாதாரமற்ற அசைவ உணவுகளை தொடர்ச்சியாக உண்ணும் போது, ஜீரண உறுப்புகள் நிரந்தரமாக பாதிக்கப்படும் அபாயமுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment