Sep 19, 2013

தரச்சான்று இல்லாமல் செயல்பட்ட குடிநீர் விற்பனை நிலையங்களுக்கு சீல் அதிகாரிகள் நடவடிக்கை

கோவில்பட்டி,
கோவில்பட்டியில் ஐ.எஸ்.ஐ. தர நிர்ணயச் சான்றிதழ் பெறாத 6 குடிநீர் விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.
ஐ.எஸ்.ஐ. தர நிர்ணயச் சான்று
தூத்துக்குடி மாவட்டத்தில் 43 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இதில் 12 தொழிற்சாலைகள் ஐ.எஸ்.ஐ. தர நிர்ணயச் சான்றிதழ் பெறவில்லை.
எனவே அந்த தொழிற்சாலைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் ஐ.எஸ்.ஐ. தர நிர்ணயச் சான்றிதழ் பெறுமாறு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ் அறிவுறுத்தினார். ஆனாலும் அந்த தொழிற்சாலைகள் ஐ.எஸ்.ஐ. தர நிர்ணயச் சான்றிதழ் பெறாமல் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்து வந்தன.
கோவில்பட்டியில் 7 இடங்களில் செயல்படும் குடிநீர் விற்பனை நிலையங்கள் ஐ.எஸ்.ஐ. தர நிர்ணயச் சான்றிதழ் பெறவில்லை. எனவே மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாரிச்சாமி, பொன்ராஜ், சுகுமார், சிவபாலன், நீதிமோகன் ஆகியோர் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு, புது அப்பனேரி, முடுக்கு மீண்டான்பட்டி, லட்சுமிபுரம், தெற்கு திட்டங்குளம் ஆகிய பகுதிகளில் செயல்படும் குடிநீர் விற்பனை தொழிற்சாலைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
6 நிலையங்களுக்கு சீல்
அப்போது ஐ.எஸ்.ஐ. தர நிர்ணயச் சான்றிதழ் பெறாத 6 நிலையங்களை மூடி அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறுகையில், தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், கருங்குளம் ஆகிய இடங்களில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் 5 தொழிற்சாலைகள் ஐ.எஸ்.ஐ. தர நிர்ணயச் சான்றிதழ் பெறாமல் இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ‘சீல்‘ வைக்கப்படும்.
பொதுமக்கள் குடிநீர் பாட்டில்களில் ஐ.எஸ்.ஐ. தர நிர்ணயச் சான்றிதழ் முத்திரை உள்ளதா? என்று பார்த்து வாங்க வேண்டும். தயாரிப்பு தேதி, காலாவதி தேதியையும் கவனிக்க வேண்டும். தயாரிப்பு தேதியில் இருந்து 9 மாதங்களைக் கடந்த குடிநீர் பாட்டில்களை வாங்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment