Sep 24, 2013

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு லாரியில் தண்ணீர் விற்பனை செய்ய அரசிடம் அனுமதி பெற வேண்டும்

சென்னை,செப்.24:
தண்ணீர் லாரி மூலம் விற்பனை செய்ய அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய திருப்பூர் பகுதி முன்னேற்ற கம்பெனி லிமிடெட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,‘திருப்பூரில் லாரிகள் மூலம் குடிநீரை பொதுமக்களுக்கும், தொழில்நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வந்தோம். திடீரென்று அரசு அதிகாரிகள் எங்கள் வியாபாரத்தில் குறுக்கீடு செய்து குடிநீர் லாரிகள் எடுத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும். எனவே லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்க கூடாது என்று உத்தரவிட்டனர். இது தவறானது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தனி நீதிபதி விசாரித்து, லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யலாம். அதை அரசு தடுக்க கூடாது என்று தீர்ப்பு கூறினார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அந்த அப்பீல் வழக்கில், குடிநீர் லாரிகள் மூலம் எடுத்து விற்பனை செய்தால்நிலத்தடி நீர் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் தடுப்பு சட்டப்படி அரசிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், சிவஞானம் ஆகியோர் விசாரித்து, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். லாரிகள் மூலம் குடிநீர் விற்பனை செய்வதற்கு முன்பு பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அரசு அனுமதியில்லாமல் குடிநீர் எடுத்து சட்டப்படி விற்பனை செய்யக்கூடாது என்று தீர்ப்பு கூறினர்.

1 comment:

  1. Really a good news. Actually just now I come to know that even private water lorry services are available in chennai

    ReplyDelete