‘சேலத்திற்கு அனுராதா வந்ததும் தரமற்ற உணவு தயாரிப்பவர்கள் தொட்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் வரை அனைவரும் அலறி வருகின்றனர். தடாலடியாக தனது டீமோடு சென்று ரெய்டு நடத்துவதும், பறிமுதல் செய்வதுமான இவரது அதிரடியில் வியாழன்று மாட்டியது 550 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் 211 கிலோ போலி டீ தூள்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை சந்தைபேட்டை சுடுகாடு அருகில் ஒரு குடோனில் குட்கா, புகையிலை பதுக்கலை பிடிக்க டீமில் இருந்த வாழப்பாடி ப்ளாக் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி நம்மிடம்,
‘எங்க அனுராதா மேடம்க்கு ‘போலி டீ தூள் தயாரிக்கிறாங்க’ என கால் வரவும் காலை 6 மணிக்கே கிளம்பிட்டோம். கெளத்தூர் பகுதியில் மாதேஷ் என்பவர் வீட்டில் 95 கிலோ போலி டீ தூளும், பாசிசெட்டிப்பட்டியில் அறிவழகன் என்பவர் தயாரித்து வந்த 116 கிலோ டீ தூளும் பறிமுதல் செய்தோம். அங்கே சோலார், ஒலிம்பியா, 4 ரோசஸ், அஸ்ஸாம் டீ, 5 ரோசஸ் என்றெல்லாம் பெயர்களில் டீ தூள் இருந்தது இதை எப்படி போலி டீ தூள் என கண்டறிவோம் என்றால், தண்ணீரில் போட்டால் அதன் சாயம் சலசலவென போகும். அப்படிப்பட்ட அந்த டீ தூள்களை பகுப்பாய்வு செய்ய அனுப்புவோம். அதன் பின் அங்கிருந்து செவ்வாய்பேட்டையில் ஒரு குடோனில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை, குட்காக்கள் நகரம் முழுக்க விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வந்து எங்க அனுராதா மேடம் டீமோடு இங்கு வந்தோம். சதீஷ் என்பவர் இதை விநியோகித்து வருவதாக அறிகிறோம். 500 கிலோ புகையிலை, 25 கிலோ குட்கா என கிட்டத்தட்ட ஒன்னரை லட்சம் மதிப்புள்ளவைகள். கடைகளுக்குச் சென்று பறிமுதல் செய்வதையும் தாண்டி அதன் விநியோகிக்கும் இடத்திற்கே சென்று பறிமுதல் செய்துள்ளார் எங்க மேடம். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திருமூர்த்தி பாலு, சிங்காரவேல், அன்புபழனி, சிரஞ்சீவி, மாரியப்பன், ராஜ்குமார் ஆகியோர் கொண்டது டீம்’ என்றார்.
நாம் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவிடம் பேசினோம்.
‘இந்த புகையிலை, குட்கா உட்பட்ட பொருட்கள் விநியோகம் செய்யகூடாது என்று 23.05 தேதி அரசானை வந்தது. 25.06.2013 வரை கால அவகாசம் இருந்தது. அதன் பின்னும் இந்த போதை வஸ்துகள் விநியோகம் நடந்து வர அதன் பின் தான் எங்கள் டீமோடு இன்று திடீர் ரெய்டு நடத்தி பறிமுதல் செய்தோம். மற்றபடி நான் என் கடமையை தான் செய்தேன் வேறெதுவும் பெரிதாக செய்யவில்லை’ என்றார் அடக்கமாக.
நாளைய சமூகம் போதையில் தடுமாறாத தெளிந்த சமுதாயமாக மலர இன்றைய பறிமுதல்கள் என்றும் தொடரட்டும் நிரந்த வெற்றி வரும் வரை. அதுவரை அனுராதாவின் அதிரடிகளும் தொடரட்டும்!
No comments:
Post a Comment