May 17, 2013

குடிநீர் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு


சென்னை : அனுமதியில்லாத, 92 குடிநீர் நிறுவனங்களை மூட உத்தரவிட்ட, மாசு கட்டுப்பாட்டு வாரியம், அடுத்த கட்ட நடவடிக்கையாக, நிறுவனங்களின் மின் இணைப்புகளை, அதிரடியாக துண்டித்துள்ளது. தமிழகம் முழுவதும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் தருவதாகக் கூறி, ஏராளமான நிறுவனங்கள் பெருகி விட்டன. ஐ.எஸ்.ஐ., தரச் சான்று பெற்றிருந்தாலும், தரம் குறைவாக இருப்பது, இந்திய தர நிர்ணயத் துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.
இந்த விவகாரம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (தென் மண்டலம்), தாமாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. அனுமதியில்லாத குடிநீர் நிறுவனங்களை மூட உத்தரவிட்டது. இதையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், அனுமதியின்றி செயல்படுவதாக கண்டறியப்பட்ட, 98 குடிநீர் நிறுவனங்களில், 92 நிறுவனங்களை மூட உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மின் வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்புடன், இரண்டு நாட்களாக, மின் இணைப்புகளை துண்டிக்கும் பணிகள் நடந்தன.
இதன்படி, சென்னை- 12, அம்பத்தூர்- 41, திருவள்ளூர்- 21, ஸ்ரீபெரும்புதூர்- 12, மறைமலை நகர்- 6 என, 92 நிறுவனங்களின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "அனுமதியில்லாத குடிநீர் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு விவரங்கள், இன்று, பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment