May 14, 2013

பான்மசாலா, குட்கா கிடைக்கக்கூடாது


நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பது தமிழ்நாட்டில் காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். இதற்காகத்தான் தமிழக அரசு, மக்கள் நல்வாழ்வுத்துறைக்கென ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கணிசமான தொகையை ஒதுக்கி வருகிறது. இப்போதும் கிராமங்களில் சிலர் அந்தகாலங்களில் எல்லாம் இப்படி புதிது புதிதாக நோய் வரவா செய்தது? இப்போதுதானே கேள்விப்படாத பெயர்களில் எல்லாம் நோய்கள் வருகிறது என்கிறார்கள். ஆனால், இப்போது இருக்கும் எல்லா நோய்களும் அப்போதும் இருந்தது. நவீன மருத்துவ உலகில்தான் இந்த நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான மருந்துகள் கொடுக்கப்படுவதாலும், தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாலும், மரணத்தை தழுவாமல் ஆயுசு நாட்களை கூட்டிக்கொள்ள முடிகிறது. பொதுவாக மக்களின் வாழ்க்கை முறையும், அவர்களது பழக்கவழக்கங்களும், உணவு முறைகளுமே பல நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக, புகையிலையை எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும், அது நிச்சயமாக புற்றுநோயை வரவைத்துவிடுகிறது என்பது உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ நிபுணர்களால் நிரூபிக்கப்பட்ட ஒரு அசைக்கமுடியாத ஆதாரமாகும். சிகரெட், சுருட்டு, பீடியாக குடித்தாலும் புற்றுநோய்தான். புகையிலையை அப்படியே சவைத்தாலும், பான்மசாலா, குட்கா போன்ற பொருளாக பயன்படுத்தினாலும், அது புற்றுநோய் வருவதற்கான வாசலை திறந்துவிடுகிறது.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இணை பேராசிரியர் டாக்டர் ஆர்.சுவாமிநாதன், தமிழ்நாட்டில் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணக்கோடு, இப்போது புதிதாக 2,825 பேருக்கு வாயில் புற்றுநோயும், 1,771 பேர்களுக்கு நாக்கில் புற்றுநோயும் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்கு முக்கிய காரணம் பான்மசாலா, குட்கா போன்ற வஸ்துக்களை வாயில் போட்டு மெல்லுவதும், புகையிலையை சவைப்பதுமே ஆகும். பெண்களை பொருத்தமட்டில், வயதான பெண்கள்தான் வாயில் புற்றுநோயோடு வருகிறார்களே தவிர, இளம் பெண்கள் மிகவும் அபூர்வமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஆண்களை பொருத்தமட்டில், இந்த பழக்கத்தினால் இளைஞர்களும், அதுபோல வயதானவர்களும் வாயில் புற்றுநோயோடு அவதிப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் 16.2 சதவீத மக்கள் புகையிலையை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துகிறார்கள்.
இத்தகைய புற்றுநோய்களை தடை செய்யவேண்டும் என்று 2001-ம் ஆண்டே முதல்-அமைச்சர் ஜெயலலிதா புகையிலை பொருட்களை தடை செய்து, அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், இதுபோன்ற  அறிவிக்கைகளை வெளியிட மத்திய அரசாங்கத்துக்குத்தான் அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம், தமிழக அரசு வெளியிட்ட அந்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டது. இப்போது மீண்டும் உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கோரியது, தமிழக அரசுக்கு தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்ற சாதகமாக போய்விட்டது. சட்டசபையில் புகையினால் ஏற்படும் பல்வேறு வகையான புற்றுநோய்களை தடுக்கும் வண்ணம் குட்கா, பான்மசாலா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதித்து சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டார். புற்று நோயற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பை, நிறைவேற்றவேண்டிய பொறுப்பு இனி காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், உணவு மற்றும் மருந்து பாதுகாப்புத்துறை, மாநில புகையிலை தடுப்பு பிரிவு, ஏன் சிறு கடைக்காரர்களுக்கும் கூட இருக்கிறது.
வெறும் தடையால் மட்டும் இத்தகைய பொருட்களை ஒழித்துவிட முடியாது. ஏனெனில், பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களை மிக சிறிய பாக்கெட்டுகளில்தான் அடைத்து விற்கிறார்கள். இதை வெளியே தெரியாமல் ஒளித்து வைத்து விற்பதற்கு மிக எளிதான வாய்ப்புகள் உண்டு. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள், இதை ஒரு சமுதாய கடமையாக மேற்கொண்டு, இதில் லஞ்சத்துக்கோ, லாபத்துக்கோ இடமில்லாமல், தமிழ்நாட்டை பான்மசாலா, குட்கா இல்லாத மாநிலமாக ஆக்கி, மக்களின் நல்வாழ்வுக்கு துணை நிற்கவேண்டும்.

No comments:

Post a Comment