May 18, 2013

92 நிறுவனங்களின் குடிநீரை ஆய்வு செய்ய வேண்டும் ; தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


சென்னை : சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்உள்ள, 92 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் குடிநீரை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் (சென்னை மண்டலம்) உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் அனுமதியின்றி இயங்கி வரும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பான வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணை நடந்தது. மேலும், ஏற்கனவே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக தென்னிந்திய குடிநீர் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தாக்கல் செய்த மனு மற்றும், சென்னையில் உள்ள "சண்முகா அக்வா இன்டஸ்ட்ரீஸ், வாசு வாட்டர் சொல்யூசன்ஸ்' உள்ளிட்ட, ஐந்து நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையும் நடந்தது.

விசாரணையில் நேரில் ஆஜரான, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் பாலாஜி கூறியதாவது: இதுவரை, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாத, 98 நிறுவனங்களில், 92 நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; ஆறு நிறுவனங்கள் தாமாக முன் வந்து மூடி விட்டன. 92 நிறுவனங்களில், 78 நிறுவனங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது; மற்ற நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், 92 நிறுவனங்களில், சில நிறுவனங்கள் மட்டுமே, அனுமதிக்கான விண்ணப்பங்களை அளித்துள்ளன. அனுமதி அளிக்க வேண்டும் என்றால், அந்த நிறுவனங்கள் தயாரிக்கும் குடிநீரை மாதிரி எடுத்து ஆய்வு செய்வது அவசியம். இதற்கான பரிசோதனை மையம் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறையிடம் உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறையின் கூடுதல் ஆணையர், டாக்டர் வாசகுமார் ஆஜரானார். அப்போது, பரிசோதனை மையத்தில், குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பாய நீதிபதி சொக்கலிங்கம், உறுப்பினர் பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு : மூடப்பட்ட, 92 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விதிமுறைகளை பூர்த்தி செய்து, அனுமதிக்காக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவை, விதிமுறைகளை பூர்த்தி செய்துள்ளனவா என்பதை வாரியம் ஆய்வு செய்ய வேண்டும்.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் குடிநீர் மாதிரியை சேகரித்து, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறையிடம் ஒப்படைக்க வேண்டும். பரிசோதனை மையத்தில், அவற்றை ஆய்வு செய்ய வேண்டும். பிறகு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறையும் தங்களின் ஆய்வறிக்கைகளை, வரும், 27 ம் தேதி, தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆய்வு செய்யும் மாதிரிகளை, வழக்கு முடியும் வரை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை வரும், 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது
 

No comments:

Post a Comment