May 24, 2013

குடிநீர் மாதிரிகள் தரப் பரிசோதனை: 2 நாளில் முடிக்க முயற்சி


குடிநீர் மாதிரிகள் தரப் பரிசோதனை: 2 நாளில் முடிக்க முயற்சி
பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி மூடப்பட்ட, 92 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில், 85 நிறுவனங்களின் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தரப் பரிசோதனை நடந்து வருகிறது. "இரண்டு நாட்களில் தரப் பரிசோதனை முடியும்' என, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.

சென்னையில், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து, விற்பனைக்கு அனுப்பப்படும் குடிநீர், தரமில்லாதது குறித்த வழக்கில், மூடப்பட்ட, 92 நிறுவனங்களிலும் குடிநீர் மாதிரிகள் எடுத்து, அதன் தரம் குறித்த அறிக்கையை, 27ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என, தேசிய பசுமை
தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மூலம், குடிநீர் மாதிரிகள் எடுக்கும் பணி, கடந்த, 18ம் தேதி துவங்கியது. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் கொடுக்கப்பட்டு, மாதிரிகள் எடுக்கப்பட்டன.
இரண்டு நாட்களில், 42 நிறுவனங்களில் மட்டுமே, குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன. நிறுவனங்கள் மூடப்பட்டிருந்ததாலும், நிறுவன உரிமையாளர்கள் அங்கு இல்லாததாலும், மாதிரிகளை உடனே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, 22ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டு, மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர்கள், மாதிரிகளை தொடர்ந்து சேகரித்து வந்தனர். நேற்று வரை, சென்னை - 10, காஞ்சிபுரம் -18, திருவள்ளூர் - 57 என, மொத்தம், 85 நிறுவனங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாதிரிகள் அனைத்தும், உணவு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, தரப் பரிசோதனை நடந்து வருகிறது.

இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கிண்டி, கிங் ஆய்வு மைய வளாகத்தில் உள்ள, உணவு பாதுகாப்புத் துறை பரிசோதனைக் கூடத்தில், தரப் பரிசோதனை நடந்து வருகிறது. பணி, பாதிக்கு மேல் முடிந்துள்ளது. ஓரிரு நாளில், பரிசோதனை முற்றிலும் முடிந்து விடும். இது பற்றிய விவரம், இம்மாதம், 27ம் தேதி, பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும்' என்றார்.

முந்தைய பரிசோதனையில்...?:சென்னையில் உள்ள, 25 நிறுவனங்களின் குடிநீர் மாதிரிகளை, உணவு பாதுகாப்புத் துறையினர் ஏற்கனவே எடுத்து பரிசோதித்துள்ளனர். இதில், இரண்டு நிறுவன குடிநீர் மட்டுமே, சரியான தரத்துடன் இருந்தது தெரிய வந்தது.ஆறு நிறுவன குடிநீர், பாதுகாப்பற்றது; குடிக்க பயன்படுத்தக் கூடாதவை எனவும், மேலும், 17 நிறுவன குடிநீர், தரம் குறைவானது; மேம்படுத்த வேண்டியது எனவும், பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை, இந்த நிறுவனங்களுக்கு, ஏற்கனவே "நோட்டீஸ்' வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment