Apr 11, 2013

குளிர்ச்சி தரும் அதிர்ச்சி

பகலில் சுட்டெரிக்கும் வெயில்...! மண்டையைப் பிளக்கிறது...! அதன் பாதிப்பு இரவிலும் நீடிக்கிறது. "வெயில் என்றால் வேலூர்'தான் என்பார்கள். ஆனால், இப்போது வேலூரைக் காட்டிலும் மற்ற நகரங்களில்தான் 100-க்கும் மேற்பட்ட டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது. இது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு கோடைப் பருவம் மார்ச் மாதக் கடைசியிலேயே தொடங்கி மக்களை வாட்டி வதைக்கிறது.
இக் காலகட்டத்தில் நமது உடல் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கமானதுதான். உடலின் செயல்பாடுகளிலும் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். குறிப்பாக, அளவுக்கு அதிகமாக தாகம் ஏற்படும், வெப்பம் அதிகரிக்கும், வழக்கத்தைவிட அதிகமான அளவு வியர்வை வெளியேறும்; இதனால் உடல் சோர்வடையும். இவற்றைப் போக்க நாம் தேடிப் போவது குளிர்ந்த காற்று, குளிர்ந்த தண்ணீர், குளிர்பானங்களாகத்தான் இருக்கும்.
முதலில், குளிர்ந்த காற்றுக்காக ஏர்-கூலர் அல்லது ஏ.சி.யை நாடிச்செல்கிறோம். இந்தக் காற்றில் பரவிவரும் கண்ணுக்குப் புலப்படாத தூசிகள் பற்றி நாம் யோசிப்பதில்லை. நம்முடைய வீடுகளில் இந்த வசதி இல்லாவிட்டால், பணம் போனால் போகட்டும் என்று குளிர்சாதன திரையரங்கிற்குச் சென்று நேரத்தைக் கழிக்கிறோம்.
குளிர்ந்த நீருக்காக, நீரின் இயல்பு நிலையைக் குளிர்விக்கும்போது அதன் மூலக்கூறுகள் மிக நெருக்கம் அடைந்து, தன்னுடைய ஆற்றலை வெளியேற்றிவிடுகிறது. இதையடுத்து, அந்த குளிர்ந்த நீரை நாம் பருகும்போது உடல் உள் உறுப்புகள் தன்னுடயை அதிகப்படியான ஆற்றலைச் செலவழித்து, அந்த குளிர்ந்த நீரை இயல்புநிலைக்குக் கொண்டுவர முயல்கின்றன. அப்போது நமக்கு தாகம் எடுப்பது குறைகிறது. இதனால் உடலின் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு ஜலதோஷம், இருமல், காய்ச்சல், வயிற்று வலி, தொண்டையில் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. இதனால் குழந்தைகள்தான் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.
இறுதியாக, குளிர்பானங்களைத் தேடிப்பிடித்து பருகும் நாம், அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்று யோசித்துப் பார்ப்பதில்லை. அந்த அளவுக்குத் தாகம் நமக்கு.
குளிர்பானங்கள் தயாரிப்பில் குளுக்கோஸ் (சர்க்கரை மாவு), பிரக்டோஸ், காபின், கலருக்கான ரசாயனம் போன்ற மூலப் பொருள்கள் கலக்கப்படுகின்றன. அதைக் கண்ணாடி, அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கும்முன் "கேஸ்' நிரப்பப்படுகிறது. இதுவும் வாயுநிலையிலான ஒரு வகை ரசாயனம்தான். இவை அனைத்தும் உடலுக்குள் செல்லும்போது, உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் உடல் தசைகள் வலுவிழப்பதோடு, சிறுநீரகத்தையும் பாதிக்கிறது.
குளிர்பானங்களையே கண்டிராத நம் முன்னோர்கள் கோடையினால் ஏற்படும் சோர்வுக்கு மோர், இளநீர், பானகம் அல்லது பழைய சாதத்தில் ஊற்றிய நீர் ஆகியவற்றைத்தானே நாடிச் சென்றனர். இதனால் அவர்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
குளிர் பானங்கள் வருவதற்கு முன்னால் கோலி சோடாவும் கலரும் கொஞ்ச காலம் நம்மை ஆட்சி செய்தன. அவற்றால் அவ்வளவாகத் தீமைகள் ஏற்பட்டுவிடவில்லை.
குளிர்பானங்கள் அருந்துவதால் உடலுக்குக் கெடுதல் எனத் தெரிந்தும், கலர் கலராய் காட்சியளிக்கும் குளிர்பானங்களை அவரவர் தகுதிக்கேற்ப தேர்ந்தெடுத்து அருந்துவதை பெருமையாகக் கருதுகின்றனர். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் குளிர்பானங்களை வாங்கிக் கொடுத்து உபசரிக்கிறோம். குழந்தைகளுக்கும் கொடுத்து சிறிய வயதிலேயே நோய்க்குள் கொண்டு வருகிறோம். இதிலும் சிலர், வயிற்று வலி ஏற்பட்டால் "கருப்புக் கலர் வாங்கிக் குடி' என்பார்கள். இதை அறியாமை என்றுதான் கூறவேண்டும்.
அடிக்கடி குளிர்பானங்கள் குடித்தால் உடல் பலவீனமடைவதோடு, நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டு, உடல் உறுப்புகள்கூட செயலிழக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதைவிட அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
குளிர்பானங்களை வரம்பின்றி அருந்துவதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.8 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், இவற்றால் ஏற்படும் நீரிழிவு நோயால் ஆண்டுதோறும் 1.33 லட்சம் பேரும், இதய நோயால் 44 ஆயிரம் பேரும், புற்று நோயால் 6 ஆயிரம் பேரும் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் எடை அதிகரிப்பதற்குக் குளிர்பானங்கள் முக்கியக் காரணியாக அமைகின்றன.
""அதிக அளவில் குளிர்பானம் அருந்தி உயிரிழப்பவர்களில் 78 சதவீதம் பேர் குறைவான, நடுத்தர வருமானம் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அமெரிக்காவில் கடந்த 2010-ஆம் ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் பேர், மிதமிஞ்சி குளிர்பானம் அருந்தியதால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது''.
இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மெக்சிகோ; அங்கு அதிகளவில் குளிர்பானம் பருகிய 10 லட்சம் பேரில் 318 பேர் உயிரிழந்துள்ளனர் என கிரேக்க நாடு சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த ஆய்வுக்குழுவின் இணை ஆசிரியர் கீதாஞ்சலி எம். சிங் தெரிவித்துள்ளார்.
ஆகவே, விலை உயர்ந்த அன்னிய நாட்டு குளிர்பானங்களை அருந்துவதை தவிர்த்து, மலிவு விலையில் கிடைக்கும் நம்மூர் குளிர்பானங்களான மோர், கம்மங்கூழ், இளநீர் போன்றவற்றை அருந்தியும், தர்பூசணி, வெள்ளரி, வாழைப்பழங்கள் போன்றவற்றைச் சாப்பிட்டும் உடலைக் குளிர்ச்சியாக்கி நீண்ட நாள் வாழலாமே...!

No comments:

Post a Comment