Apr 19, 2013

"கார்பைட்' மூலம் பழுக்க வைக்கப்படும் மா சுகாதாரத்துறை கண்காணிக்க கோரிக்கை



"கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முன்பருவ மா ரகங்களான செந்தூரா, மல்கோவா, பீத்தர், ஆகிய மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. கார்பைட் என்ற ரசாயனக் கற்கள் கொண்டு மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதை சுகாதார துறையினர் கண்காணிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், மா உற்பத்தியில், கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பர்கூர், ஜெகதேவி, சந்தூர், தொகரப்பள்ளி, மத்தூர், ராயக்கோட்டை, வேப்பனபள்ளி ஆகிய பகுதிகளில், 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில், மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
வழக்கமாக, ஏப்ரல் துவக்கத்தில் இருந்து, முன்பருவ ரக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துவிடும். இந்தாண்டு சீரான மழை இல்லாததால், மாவட்டத்தில் மா விளைச்சல், கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
மாவட்டத்தில், சொட்டு நீர் பாசனம் மூலம் மா சாகுபடி செய்துள்ள தோட்டங்களில் விளைந்த முன்பருவ ரகமான செந்தூரா, மல்கோவா, பீத்தர் ஆகிய மா ரகங்கள், அறுவடை செய்யப்பட்டு, தற்போது கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
மல்கோவா ஒரு கிலோ, 80 ரூபாய்க்கும், செந்தூரா, 30 ரூபாய்க்கும், பீத்தர், 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாம்பழ சீஸன் துவக்கத்தில், அதிக விலை இருக்கும் என்பதால், வியாபாரிகள் சீராக, வளர்ச்சியடையாத மாங்காய்களை பறித்து, விற்பனைக்கு எடுத்து வருகின்றனர்.
இனி வரும் நாட்களில், மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் போது, முன்பருவ ரக மாங்காய்கள் உதிர்ந்து, சேதமடையும் என்பதால், விவசாயிகள், முன் கூட்டியே மாவை அறுவடை செய்யத் துவங்கி விட்டனர்.
கடந்த காலத்தில், மாங்காய்கள், மரங்களில் பழுக்க ஆரம்பித்த பின், தோப்புகளில் இருந்து மா பறிக்கப்படும். இவ்வாறு பறித்த மாங்காய்களை, வியாபாரிகள் பெரிய இருட்டறையில், வைக்கோல் போட்டு, புகை மூட்டம் போட்டு பழுக்க வைப்பர்.
இருட்டறையில் வைக்கோல் கொண்டு பழுக்க வைக்கும் போது, மாங்காய்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் பழுப்பதில்லை. மேலும், பறிக்கப்பட்ட காய்கள் பழுக்க, குறைந்தது, ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.
வைக்கோல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்கள், சுவை சுமாராக இருந்தாலும், இவ்வகை பழங்களை, பொதுமக்கள் வாங்கி சாப்பிடும் போது, எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்கும்.
தற்போது, வியாபார ரீதியாக, மா விற்பனை செய்யும் வியாபாரிகள், மாங்காய்களை சீராக பழுக்க வைக்கவும், இனிப்பு தன்மை அதிகம் கிடைக்கவும், "கார்பைட்' என்ற ரசாயனக் கற்கள் மூலம், மாவை பழுக்க வைத்து, விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.
மாங்காய்கள், ரசாயனக்கற்கள் கொண்டு பழுக்க வைப்பதால், பலநாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. அதனால், இம்முறையை, அதிக வியாபாரிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர். மாம்பழம் பழுக்க, இந்த முறை எளிய வழியாக இருந்தாலும், ரசாயனக்கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை, பொதுமக்கள் சாப்பிடும் போது, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஆகிய நோய்கள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்து வருகின்றனர்.
கடைகளில், மாம்பழங்கள் வாங்கும் போது, பழங்கள் எந்த முறையில் பழுக்க வைக்கப்பட்டது என்பதை கேட்டறிந்து வாங்குவது, உடலுக்கு நல்லதாகும்.
"உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனக்கற்கள் கொண்டு மாம்பழம் பழுக்க வைக்கப்படுவதை, சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment