நாகூர் கந்தூரி விழா நடைபெற உள்ள நிலையில்
வணிகர்கள் உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளை முழுமையாகப் பின்பற்றி
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர்
ஏ.டி. அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகூர் கந்தூரி விழாவையொட்டி, உணவு கலப்படத்தை கண்காணித்து நடவடிக்கை
எடுக்க வேண்டும், பாதுகாப்பான உணவு விற்பனையை உறுதி செய்ய வேண்டும் என
மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மேற்பார்வையில்,
நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் 4 உணவுப் பாதுகாப்பு
அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கந்தூரி விழாக் காலங்களில் நாகூருக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருவர்
என்பதைக் கருத்தில் கொண்டு, வணிகர்கள் பாதுகாப்பான உணவுகளை பொதுமக்களுக்கு
வழங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை எந்தக் காரணத்துக்காகவும் திறந்த நிலையில் வைத்து விற்பனை செய்யக் கூடாது.
தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் முழு முகவரி இல்லாத உணவுப் பண்டங்களை
கண்டிப்பாக விற்பனை செய்யக் கூடாது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி
செய்யப்பட்ட உணவுப் பொருள்களில், இறக்குமதியாளர் முகவரியில்லாத உணவு வகைகளை
விற்பனை செய்யக் கூடாது.
காலாவதியான உணவுப்பொருள்களை கண்டிப்பாக விற்கக் கூடாது.
எந்த தேநீர் கடையிலாவது சாயம் கலந்த தேநீர் பொடி பயன்படுத்தப்படுவது
தெரியவந்தால், தொடர்புடைய கடையின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்.
எவரேனும், உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்காக லஞ்சம் கோரி வந்தால், அது
குறித்து வணிகர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அல்லது ஊழல் ஒழிப்பு மற்றும்
கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்
கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment