தண்டையார்பேட்டை, ஏப்.9:
சென்னை
நகரில் வெயில் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள்
மோர், இளநீர், மற்றும் குளிர்பானங்களை அதிகம் நாடுகின்றனர். இதனால் குளிர்
பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
இதையடுத்து,
பல்வேறு போலி குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தரமில்லாத,
சுகாதாரமில்லாத குளிர்பானங்களை தயாரித்து விற்பதாக சென்னை மாவட்ட உணவு
பாதுகாப்பு அலுவலருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து,
உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் சதாசிவம், இளங்கோவன், ஜெயகோபால், செந்தில்
ஆறுமுகம் ஆகியோர் வடசென்னையில் உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி சாலை
உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகள், குளிர்பானம் தயாரிக்கும்
நிறுவனங்கள் ஆகியவற்றில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது,
தரமில்லாத, சுத்தமில்லாத குளிர்பானங்கள் தயாரிப்பது தெரியவந்தது.
அங்கிருந்து பிரபல நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்பட்ட 2000 லிட்டர் போலி
குளிர் பானங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த நிறுவனங்களுக்கு
அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினர். கைப்பற்றப்பட்ட
குளிர்பானங்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு ஆய்வறிக்கைக்கு
பின்னர் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment