Dec 23, 2012

மாநிலம் முழுவதும் லேபிள் இல்லா உணவு பண்டங்கள் பறிமுதல்


சேலம், டிச.23:
உணவு பொருட்களின் மீது முழு விவரம் அடங்கிய உரிய லேபிள் இல்லாவிட்டால், வரும் பிப்ரவரி 4ம் தேதி முதல் அந்த உணவு பொருள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம்&2006 கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட தரமான உணவு பொருட்களை மட்டுமே வணிகர்கள், வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாகவும், அச்சட்டத்தின் சாராம்சங்கள் குறித்தும் வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை மூலம் அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவு பொருட்களின் தரம் குறித்து வணிகர்கள், ஹோட்டல் அதிபர்கள், வியாபாரிகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் இருக்கும் உணவகங்களில் சோதனையிட்ட உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உணவு பொருட்களை தயாரித்து பொட்டலம் போடுபவர்கள், உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி முறுக்கு, சீடை, மிக்சர், சிப்ஸ், குடல் அப்பளம், கார வகைகள், வறுக்கி, பிஸ்கட், கேக்குகள், பன்கள், பிரட்டுகள், மிட்டாய் உள்ளிட்ட இனிப்பு வகைகள், ஜாம், ஊறுகாய் வகைகளை தயாரித்து பொட்டலம் போடும் போது, அதன்மீது அந்த உணவு பொருட்களின் முழு விவரம் அடங்கிய லேபிள் இருக்க வேண்டும்.
உணவின் பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, லாட் நம்பர் அல்லது பேஸ் நம்பர், எடை அளவு, தயாரிப்பு முழு முகவரி மற்றும் தொலைபேசி எண், சைவ உணவாக இருந்தால் சிம்பல், விலை (எம்ஆர்பி) ஆகிய 8 விவரம் அந்த பொட்டலத்தின் மீது உரிய பேக்கேஜிங் மற்றும் லேபிலிங் இருக்க வேண்டும். பேனா மையினால் கையில் எழுதி லேபிள் தயாரித்து ஒட்டக்கூடாது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரித்து விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களிலும் இந்த லேபிள் இருக்க வேண்டும். இவ்வாறு உரிய லேபிள் இல்லாத உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் வரும் பிப்ரவரி 4ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், உணவு பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தரமற்ற உணவு பொருட்களை தடை செய்ய முடியாத நிலை இருக்கிறது. அதனால் இந்த உரிய லேபிள் ஒட்டப்படும் முறை வந்துவிட்டால், தரமற்ற உணவு பொருட்களை கண்டறிந்து அதன் மீதும், அதனை தயாரிக்கும் உரிமையாளர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
வரும் பிப்ரவரி 4ம் தேதிக்குள் அனைத்து உணவு பொருள் தயாரிப்பாளர்களும் லைசென்ஸ் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அது நடந்து முடிந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
இனி வரும் பிப்ரவரி 4ம் தேதிக்கு பின் அனைத்து கடைகளிலும் சோதனையிட்டு லேபிள் இல்லாத உணவு பொருட்களை பறிமுதல் செய்ய உள்ளோம். அதனை தயாரித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்,” என்றார்.

1 comment: