Oct 12, 2012

இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்

சென்னை:மாநகராட்சியில் உள்ள நிர்வாக குளறுபடிகளால், விதிமீறல் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல், சுகாதார பிரிவு திணறி வருகிறது. உரிமம் வழங்கும் பணியை, வருவாய் துறைக்கு மாற்றியதே சிக்கலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மாநகராட்சி நோட்டீஸ்சென்னையில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகள், மாநகராட்சியின் சுகாதார விதிகள் படி அமைக்கப் படவில்லை. 
கடந்த மாதம், சுகாதாரமற்ற இறைச்சி விற்பனை பிரச்னை வெளிச்சத்திற்கு வந்ததும்; மாநகராட்சி பகுதியில் உள்ள, 1,963 இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதில்,"விதிமுறைப்படி, கடைகளில் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். அதற்கான கட்டமைப்புக்கள் இல்லாவிட்டால், மூன்று நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப் பட்டு இருந்தது.இந்த நோட்டீஸ் வினியோகிக்கப் பட்டு, 20 நாட்களுக்கு மேலாகிவிட்டது. இடையில், கெட்டுப்போன இறைச்சியை விற்றதாக சில கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் மூடினர்.அதன் பிறகு, நோட்டீசில் அறிவித்து இருந்தவாறு எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதற்கு, மாநகராட்சியில் இருந்த நிர்வாக குளறுபடியே முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.
சிக்கல் என்ன? 
இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில், இறை ச்சி கடைகள் மற்றும் ஓட்டல்களுக்கு அனுமதி வழங்குவது, மாநகராட்சியின் சுகாதார பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்தது. உரிமம் கோரும்போது, சுகாதார அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து விதிமுறைப்படி சரியாக இருந்தால் உரிமம் வழங்கி வந்தனர்.ஆனால், 2007ம் ஆண்டில், உரிமம் வழங்கும் அதிகாரம் வருவாய் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனால், சுகாதார அதிகாரிகள் ஆய்வு இன்றி, மாநகராட்சி வருவாய் பிரிவு நேரடியாக உரிமம் வழங்கி வருகிறது.கடைகளில் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தினாலும், நடவடிக்கை எடுக்க வருவாய் பிரிவிற்கு தான் பரிந்துரைக்க வேண்டி உள்ளது. அவர்கள் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. நிர்வாக குளறுபடிகள்தான் இதற்கு காரணம்.இவ்வாறு அதிகாரி கூறினார். 
இறைச்சி கடைகள் மற்றும் உணவகங்களுக்கு உரிமம் வழங்குவது சுகாதார பிரிவிடம்தான் இருக்க வேண்டும். அப்போது தான், ஆய்வு, நடவடிக்கை என, மாநகராட்சியால் உடனுக்குடன் செயல்பட முடியும்.ஐகோர்ட் உத்தரவுமாநகராட்சிகளில், சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்யாமலேயே, வருவாய் பிரிவினர் உரிமம் வழங்குவது குறித்தும், இதை தடுக்க வேண்டுமென, சேலத்தை சேர்ந்த தங்கராஜூ என்பவர், 2011ம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மாநகரில் தரமான, சுகாதாரமான உணவு கிடைக்கும் வகையில், வழிவகைகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு, 2011 ஆகஸ்ட் 4ம் தேதி பிறப்பிக்கப் பட்டு உள்ளது. ஐகோர்ட் உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேலாகியும், அதை அமல் படுத்த சென்னை மாநகராட்சிமுன்வரவில்லை.மக்களின் சுகாதாரம் சார்ந்த விஷயத்தில், மாநகராட்சி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இறைச்சி கடைக்கான விதிமுறைகள் என்ன? 
கடையின் தரை மற்றும் சுவர்கள், எளிதில் சுத்தம் செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
கழிவுகளை சேகரிக்க, மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டி வைக்க வேண்டும்.
கழிவு நீரை வெளியேற்ற, முறையான இணைப்பு பெற்றிருக்க வேண்டும்.
ஈ, பூச்சித் தொல்லை ஏற்படாத வகையில், கம்பி வலையுடன் கதவுகள் இருக்க வேண்டும்.
பணி செய்வோருக்கு, தொற்று நோய் ஏதும் இல்லை என்று மருத்துவச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
மாநகராட்சி இறைச்சிக் கூடத்தில் வெட்டிய, இறைச்சியையே விற்க வேண்டும்.
இறைச்சிக் கூடத்திலிருந்து இறைச்சியை எடுத்துச் செல்ல, மூடியுடன் கூடிய அலுமினியப் பெட்டிகளை பயன்படுத்த வேண்டும். 
திறந்த நிலையில், சைக்கிள் அல்லது வேறு வண்டிகளை பயன்படுத்தல் கூடாது.

6 comments: