Jun 12, 2012

ஈரோட்டில் நடந்த ஆய்வில் கலப்பட பாலே இல்லை : தமிழக பால் விற்பனையை தடுக்க கர்நாடகா சதி


ஈரோடு : பெங்களூரில் கலப்பட பால் லாரி பிடிபட்ட நிலையில், "ஈரோடு மாவட்ட பண்ணைகளில் இதுவரை நடந்த ஆய்வில், கலப்பட பாலே பிடிபடவில்லை' என, தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறியுள்ளார்.

ஏன் இந்த முயற்சி? : தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு, பால் சப்ளை செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலுள்ள, தனியார் பால் பண்ணைகள் மூலம், பெங்களூருக்கு, ரெகுலராக பால் வினியோகமாகிறது. தமிழகத்திலிருந்து செல்லும் பால் வண்டிகளை, கர்நாடக அதிகாரிகள் பிடித்து, "கலப்பட பால்' எனக் கூறி, பாலை கீழே கொட்டி அழிப்பது வாடிக்கையாக நடக்கிறது. ஜூன் 9ம் தேதி இரவு, பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் நடந்த சோதனையில், ஈரோடு மாவட்டத்திலிருந்து சென்ற லாரி ஒன்று பிடிபட்டது. கர்நாடக மாநில பால்வளத் துறை அதிகாரிகள், அந்த லாரியிலிருந்த பாலை சோதனையிட்டு, அது கலப்பட பால் என கண்டறிந்தனர்.
வண்டியிலிருந்த, 5,000 லிட்டர் கலப்பட பால், பறிமுதல் செய்யப்பட்டது. பாலை எடுத்துச் சென்ற ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, தயிர்பாளையம் தியாகராஜ், மணிகண்டன் நகர் சண்முகம் என்ற முத்துசாமி, திடியூர் பாஸ்கர் ஆகிய மூவரும், கைது செய்யப்பட்டனர். தலைமறைவான பால் பண்ணை உரிமையாளர், தனசேகரை தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலிருந்து, கலப்பட பால் எடுத்து வந்ததாக, பெங்களூரில் மூவர் கைது செய்யப்பட்டதையடுத்து, ஈரோட்டில் கலப்பட பால் குறித்த ஆய்வை, தீவிரப்படுத்தும் நடவடிக்கையில், தமிழக அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

30 மாதிரிகள் ஆய்வு : பெங்களூரில், மூன்று மாதத்துக்கு முன் இதேபோல், ஈரோடு மாவட்டத்திலிருந்து கலப்பட பால் சப்ளை செய்ததாக சிலர் பிடிபட்டனர். அப்போது, ஈரோடு பண்ணைகளில், தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. 30 இடங்களில் பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், இரண்டு மாதிரிகள் தரம் குறைவாகவும், இரண்டில் லேபிள் தவறு என, நான்கு மாதிரிகளில் மட்டுமே, குறை கண்டறியப்பட்டது. மற்ற நிறுவனங்களின் பால், தரமானதாக இருந்தது. கலப்பட பால் தயாரிக்கப்பட்டதாக, இதுவரை எந்த மாதிரியும் பிடிபடவில்லை. தற்போது மீண்டும், "கலப்பட பால்' எனக் கூறி, பெங்களூரில் பால் பிடிபட்டுள்ளது, அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. முறையான லாரி அனுமதி, உணவுப் பாதுகாப்பு சட்ட அனுமதி போன்றவற்றை பெறாமல், சிலர் தமிழகத்திலிருந்து பால் சப்ளை செய்கின்றனர். அனுமதியின்றி சென்று, பிடிபடும் லாரிகள் மீது, சம்பந்தப்பட்ட குற்றத்துக்கு தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால், அதை, "கலப்பட பால்' என்று முத்திரை குத்துவதற்கே அதிகாரிகளும், போலீசாரும் ஆர்வம் காட்டுகின்றனர் என, தமிழக பால் பண்ணையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

No comments:

Post a Comment