Sep 8, 2015

மாகிக்கு விதித்த தடை தீர்வாகுமா?

பூகம்பத்தின் தொடர் அதிர்வுகள் சில நாளைக்கு நீடிக்கும். இப்போது மாகிக்கு விதித்த தடையின் பாதிப்புகள் நெஸ்லேயை மட்டுமல்ல உணவு பதப்படுத்தும் தொழிலின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
மாகிக்கு தடை விதித்தது இந்திய உணவு பாதுகாப்பு, தரப்படுத்தல் ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஆகும். இந்த அமைப்பு எடுத்த தடை எனும் நடவடிக்கை மாகி நூடுல்ஸுக்கோ அதை தயாரித்த நெஸ்லே நிறுவனத்தை மட்டுமே பாதிக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை. இதனால் 2006-ல் இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு, தரப்படுத்தல் சட்டத்துக்கும் ‘இந்திய உணவு பாதுகாப்பு, தரப்படுத்தல் ஆணையம்’ என்ற அமைப்புக்கும் கூட கடும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.
மாகி நூடுல்ஸில், அனுமதிக்கப் பட்ட அளவுக்கும் அதிகமாக ரசாய னங்கள் கலந்திருப்பதாக சோதனைச் சாலை ஆய்வுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட முடிவு குறித்தும், நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை மீறப்பட்டது குறித்தும் மும்பை உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளால் அந்த பாதிப்புகள் தெரியவந்துள்ளன. மாகி போன்ற உடனடி உணவு பொருள்களை சாப்பிட்டால் பாதிப்போ என மக்கள் மத்தியிலும், உணவு பதப்படுத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.
இந்தியாவில் தரமான ஆய்வகங் களும், பயிற்சிபெற்ற நிபுணர் களும் இல்லாத நிலையில் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட் டதோ என அஞ்சுகின்றனர் உணவு பதப்படுத்தல் துறையில் உள்ளவர்கள்.
நெஸ்லே நிறுவனம் பன்னாட்டு நிறுவனமாதலால், அந்நிறுவனத் தயாரிப்புக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக பிற வெளிநாட்டு நிறுவ னங்கள் இத்துறையில் இறங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றன.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 44,000 கோடி ரூபாய் மதிப் புள்ள வேளாண் பொருள்கள் (தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவை) அழுகியும் கெட்டும் எவராலும் உண்ணப்படாமல் வீணாகின்றன. வீணாகும் அளவைக் குறைக்க பேருதவியாய் இருப்பது உணவு பதப்படுத்தல் துறை என்றால் அது மிகையல்ல. வேளாண் பொருள்களில் 10 சதவீதம் மட்டுமே உணவு பதப்படுத்தல் துறையில் பயன்படுத்தப்படுகிறது.
கிராமங்களில் விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த வேலைகளை மட்டுமே நம்பியிருக்காமல் இத்துறை யில் ஈடுபடுவதன் மூலம் நிரந்தர வருமானத்துக்கு வழி ஏற்படுகிறது. உணவு பதப்படுத்தல் துறையானது ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கச் செய்வதுடன் லட்சக் கணக்கானோருக்கு உரிய உணவுப் பண்டங்களைப் பாதுகாப்பாகக் கிடைக்கச் செய்கிறது.
மேக் இன் இந்தியா
உணவு பதப்படுத்தலுக்கு வேண் டிய சாதனங்கள், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாகனங்கள், நீண்ட நாள்களானாலும் கெடாமல் பாதுகாப்பாக வைத்திருக்கும் பெட்டிகள் என்று பல துணைப் பொருள்களின் வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனைக்கும் வழியேற் படுகிறது. எல்லாவற்றையும்விட முக்கியம் சிறு, நடுத்தரத் தொழில் துறையில் இவற்றைச் செய்துவிட முடியும். ‘இந்தியாவிலேயே தயாரிப் போம்’ என்ற கோஷத்துக்கு ஏற்ற தொழில் இது.
சட்ட அமலால் தொழில் நசியாது
மாகி நூடுல்ஸ் விவகாரம் தொடர்பான விவாதங்களில் பெரும் பாலும் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும்தான் பேசினார்களே தவிர இந்தத் தொழில் எவ்வளவு பெரியது, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறது, இதை எப்படி மேம்படுத் தலாம் என்பதையெல்லாம் தீவிரமாகக் கவனிக்கவில்லை. இவற்றை யெல்லாம் தடை செய்துவிட்டால் உணவு பதப்படுத்தல் துறையை என்ன செய்வது?
எடை, தரம், சுவை, சுகாதாரம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் நுகர்வோரைப் பூர்த்தி செய்ய இத்துறையால் முடியும். தரமாகவும் சுவையாகவும் உணவுப் பண்டங் களைத் தயாரிக்கவும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கவும் முடியும்.
உலக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் தொழில்துறையில் அமெரிக்கா முன்னிலை வகிக் கிறது. அங்கே சட்டமும் கடுமை யாக இருக்கிறது. எனவே சட்டம் கடுமையாக இருந்தாலும் தரமாகவும் லாபகரமாகவும் தயாரிக்க முடியும் என்பதே உண்மை. வெளிப்படை யான, நன்கு வரையறுக்கப்பட்ட, அனைவராலும் எதிர்பார்க்கப்படக் கூடிய வகையில் உணவுப்பொருள் களுக்கான தரத்தை நிலைப் படுத்தலாம். அதிகார தோரணையில் தலையிட்டு பயமுறுத்தாமல், முறையாக, எளிதாக, நட்புணர்வோடு அடிக்கடி உணவு பதப்படுத்தும் நிலையங்களுக்குச் சென்று உணவுப் பண்டங்களைச் சோதிப் பதுடன் மேம்படுத்துவதற்கான யோசனை களையும் தெரிவித்துவிட்டு வரலாம். அத்துறையினரின் நியாயமான பிரச்சினைகளை அத்துறைக்கான தொழில்நுட்ப நிபுணர்களின் உதவி யோடு தீர்த்து வைக்கலாம்.
மாகிக்கு மட்டும் குறி ஏன்?
ஏராளமான நிறுவனங்கள் இத்த கைய உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும்போது மாகியின் நூடுல்ஸ்கள் மீது மட்டும் கவனம் சென்றதேன் என்ற கேள்வி எழுகிறது. இந்திய உணவுப் பண்டத்துறையில் எல்லோரும் மோசமானவர்கள் அல்ல என்றாலும் கலப்படம், ரசாயனக் கலப்பு, எடைக்குறைவு, தவறான லேபிள்களை ஒட்டுவது, தரத்தை சரியாக சோதிக்காமலேயே பாக்கெட்டில் அடைத்து அனுப்புவது என்பது போன்ற முறைகேடுகள் இல்லாமல் இல்லை. இவையெல்லாம் எப்போதோ நடப்பவை அல்ல, வழக்கமானதுதான் என்று சொல்கிற அளவுக்கு இருக்கிறது. எனவே ஒரேயொரு நிறுவனத்தைக் குறி வைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்றே கருதப்படுகிறது.
எந்த சோதனையையும் ஆய் வையும் முறையாகவும் குறிப்பிட்ட கால இடைவெளியிலும் செய்து வந்தால் துறையின் வளர்ச்சிக்கு அது பெரிதும் உதவும். எதேச்சதிகாரமாகச் சிலர் செயல்பட்டிருப்பதைத்தான் இது காட்டுகிறது. அதே நிறுவனத்தின் பாக்கெட்டுகளை வெவ்வேறு ஆய்வுக் கூடங்களில் சோதித்தபோது வெவ்வேறு முடிவுகள் கிடைத்ததும் வியப்பைத் தருகிறது.
இதன் உடனடி விளைவாக பல சகோதர நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளை சந்தையிலிருந்து விலக்கிக் கொண்டன. புதியவற்றை அறிமுகம் செய்வதை ஒத்திவைத்தன. இந்திய தரப்படுத்தல் நிறுவனமும் வெவ்வேறு பண்டங்களை இப்போது ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறது. ஆனால் இப்போதும் கூட இந் நடவடிக்கைகள் ஒழுங்காகவும் அறிவி யல் பூர்வமாகவும் அத்துறையின் வளர்ச்சிக்கு ஒத்திசைவாகவும் இல்லை என்பதே உண்மை.
அரசு முதலில் தன்னுடைய ஆய்வகங்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் உயர்த்த வேண்டும். அதன் ஆய்வாளர்கள் நல்ல பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். எல்லா பொருள்களையும் ஆய்வுசெய்ய வேண்டும். ஆய்வுகள் தொடர்ச்சியாகவும் வலிமை யானதாகவும் இருக்க வேண்டும். ஆய்வு முடிவுகளை முதலில் நிறுவனத்திடம் தெரிவித்து அதன் விளக்கத்தைப் பெற்று மேல் நடவடிக்கையை எடுக்க வேண்டும். தவறு இருந்தால் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
அங்கீகாரம் முதலிலா, பிறகா?
உணவு பதப்படுத்தும் தொழி லில் உள்ள நிறுவனங்களும் தின்பண்டங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் அரசின் உரிய துறைக்கு விண்ணப்பித்து முதலி லேயே அங்கீகாரம் பெற வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. ஆனால் அப்படி அங்கீகாரம் பெறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. தாமதம் ஏன் என்பதற்கு விளக்கம் கிடையாது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இதைக் கேள்வி கேட்டு ரத்து செய்ய உத்தரவிட்ட பிறகு இந்நடைமுறை கைவிடப்பட்டிருக்கிறது.
சர்வதேச அளவில் எந்த உணவுப் பண்ட நிறுவனமும் புதிய பொருளை அறிமுகப்படுத்தும் முன் உரிய அரசு அமைப்பிடம் அனுமதி அல்லது அங்கீகாரம் பெற வேண்டியதில்லை. பொருள் தயாரிக்கப்பட்ட உடனேயே உரிய அத்துறை அதை நன்கு பரிசோதித்து அதன் தரத்தை உறுதி செய்துகொள்கிறது.
உணவுப் பதப்படுத்தல் துறையில் பண்டங்களை ஆய்வு செய்யக்கூடாது, வரம்புகளை விதிக்கக்கூடாது, எடையை ஆராயக் கூடாது என்றெல் லாம் யாரும் தடுக்கவில்லை. இவையெல்லாவற்றையும் நிறுவனங் களுக்கு இடையூறு இல்லாமல், கால தாமதப்படுத்தாமல், நல்ல தரமான கருவிகள் உதவியுடன், நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்டு செய்யுங்கள் என்பதுதான் கோரிக்கை. நுகர்வோரின் நலனும் முக்கியம், இத்துறை வளர்வதும் முக்கியம். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment