Sep 8, 2015

வெள்ளை நிறத்தில் சவ்வரிசி தயாரிக்க பயன்படுத்தப்படும் ஈரப்பதமான மாவுப்பொருளுக்கு ஒரு வாரத்துக்குள் தடை விதிக்கவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,
வெள்ளை நிறத்தில் சவ்வரிசியை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஈரப்பதமான மாவை தடை செய்வது குறித்து ஒரு வாரத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், கள்ளக்குறிச்சி வெள்ளாப்பட்டி விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ஆர்.சந்திரசேகரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
உடல் நலம் பாதிப்பு
எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சவ்வரிசி தயாரிக்க பயன்படுத்தப்படும் மரவள்ளிக்கிழங்கை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த மரவள்ளிக்கிழங்குகளை கொண்டு சவ்வரிசி தயாரிக்கும் நிறுவனங்கள் கடந்த சில காலமாக, சவ்வரிசி அதிக வெள்ளை நிறமாக இருக்கவேண்டும் என்பதற்காக ஆசிட் மற்றும் ரசாயனங்களை பயன்படுத்துக்கின்றன. இந்த வகை சவ்வரிசி உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுவதால், இதை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை. இதை தொடர்ந்து, மரவள்ளிக்கிழங்கிற்கு விலை இல்லாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
பரிசோதனை
சவ்வரிசியில் செய்யப்படும் கலப்படங்களை தடுக்கும் விதமாக அவற்றை ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு உகந்தது என்று உணவுத்துறை அதிகாரிகள் சான்றிதழ் அளித்திருந்தால், இதுபோன்ற நிலை வந்திருக்காது. இதுகுறித்து கடந்த ஆண்டு நவம்பர் 3–ந் தேதி தமிழக அரசுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கிற்கு தமிழக பொதுசுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்கவேண்டும். குறிப்பாக சேலம் மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நேரில் ஆஜராகவேண்டும்‘ என்று உத்தரவிட்டிருந்தனர்.
ஒப்படைப்பு
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா நேரில் ஆஜராகி இருந்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
மரவள்ளிக்கிழங்கை தோலை நீக்கி சவ்வரிசியை தயாரிக்கவேண்டும். ஆனால், சில நிறுவனங்கள் அவ்வாறு செய்யாமல் ரசாயனப் பெருட்களை பயன்படுத்துகின்றனர். மேலும் வெள்ளையாக இருக்கவேண்டும் என்பதற்காக வேறு ஈரப்பதமான மாவு போன்ற ரசாயனப் பொருட்களையும் இவர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த சவ்வரிசியை ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள், அதில் தரம் குறைந்த சவ்வரிசி உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், அந்த சவ்வரிசியை உற்பத்தி செய்த உற்பத்தியாளர்களிடமே மீண்டும் கொடுத்து விடுகின்றனர்.
மலிவு விலை
இதனால், இந்த தரம் குறைந்த சவ்வரிசியை மலிவு விலைக்கு உற்பத்தியாளர்கள் சந்தையில் விற்பனை செய்து விடுகின்றனர். எனவே, இவற்றை தடுக்கும் விதமாகவும், தரம் குறைந்த சவ்வரிசியை தயாரித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் விதமாகவும், தரம் குறைந்த சவ்வரிசியை உணவு தர கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், தரம் குறைந்த, வெள்ளை நிறத்தில் சவ்வரிசி தயாரிக்க ஈரப்பதமான மாவு பொருளை உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த மாவு பொருளை அரசு தடை விதிக்கவேண்டும். எனவே, ஆய்வில் தரம் குறைந்த சவ்வரிசி என்று தெரிய வந்தால், அவற்றை உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வெள்ளை நிறத்தில் சவ்வரிசியை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஈரப்பதமான மாவு பொருளுக்கு தடை விதிப்பது குறித்தும் ஒரு வாரத்துக்குள் அரசு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
உதவ வேண்டும்
மேலும், தரம் குறைந்த சவ்வரிசி தயாரிப்பு தொடர்பாக பதிவான கிரிமினல் வழக்குகளின் விவரங்களை அரசு வக்கீல் இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல, ஏதாவது சவ்வரிசி ஆலைகள் அதிகாரிகளால் ‘சீல்‘ வைக்கப்பட்டிருந்தால், அந்த ‘சீலை‘ இந்த ஐகோர்ட்டின் அனுமதியின்றி நீக்கக்கூடாது. இது சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும், எங்கள் முன்பு விசாரணைக்கு பட்டியலிடவேண்டும். இந்த வழக்கில் உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் எங்களுக்கு (நீதிபதிகளுக்கு) உதவும் விதமாக செயல்பட வேண்டும். விசாரணையை வருகிற நவம்பர் 17–ந் தேதிக்கு தள்ளி வைக்கின்றோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment