Sep 8, 2015

ஈரப்பத 'ஸ்டார்ச்' விற்பனைக்கு தடை

சென்னை:ரசாயனம் கலந்த, ஈரப்பதமான மரவள்ளி கிழங்கு மாவான, 'ஸ்டார்ச்' விற்பனைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கான அரசாணையை, அரசு பிறப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, வெள்ளாளப்பட்டி விவசாய முன்னேற்ற சங்கம் தாக்கல் செய்த மனுவில், 'கலப்படத்தை தடுக்க, ஜவ்வரிசியை ஆய்வு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு உகந்தது என, உணவு துறை அதிகாரி சான்றிதழ் அளிக்க வேண்டும். தரமான ஜவ்வரிசி உற்பத்தியை உறுதி செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: மரவள்ளி கிழங்கை பதப்படுத்தும் போது, தோல் நீக்கப்பட வேண்டும்; சிறு உற்பத்தியாளர்களிடம், தோலை அகற்றுவதற்கான வழிமுறைகள் இல்லை. எனவே, தோலை அகற்றாமல், அதை பதப்படுத்தி, பெரும் உற்பத்தியாளர்களுக்கு கொடுத்து விடுகின்றனர்.
ஜவ்வரிசியை வெள்ளை நிறத்துக்கு கொண்டு வர, ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டாக கூறப்பட்டுள்ளது. ஒன்பது வகையான பரிசோதனைகள் மூலம், ஜவ்வரிசி ஆய்வு செய்யப்படுகிறது.பரிசோதனை முடிவு சரியாக இல்லை என்றால், உற்பத்தியாளர்களிடம், ஜவ்வரிசி திருப்பி அனுப்பப்படுகிறது. எனவே, ஜவ்வரிசி பரிசோதனையில், முடிவு சரியாக இல்லை என்றால், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
இத்தகைய ஜவ்வரிசி தான், தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. ஈரப்பதமான ஸ்டார்ச், சந்தையில் விற்கப்படுகிறது. தள்ளுபடி விலையில், உற்பத்தியாளர்கள் வாங்கி, ரசாயனம் சேர்த்து, விற்பனை செய்கின்றனர். இத்தகைய ஈரப்பத ஸ்டார்ச் விற்பனைக்கு, தடை விதிக்க வேண்டும்.
இந்த, இரண்டு பிரச்னைகள் தொடர்பாக, ஒரு வாரத்தில், தமிழக அரசு, தேவையான அரசாணைகளை பிறப்பிக்க வேண்டும். ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளை, உணவு மற்றும் பாதுகாப்பு துறை கண்காணிக்க வேண்டும்.
இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் பட்டியலை, உயர் நீதிமன்ற பதிவாளரிடம், உதவி அரசு குற்றவியல் வழக்கறிஞர் வழங்க வேண்டும். இந்த வழக்குகளை விரைந்து முடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, பதிவாளர் அறிக்கை அளிக்க வேண்டும்.
கலப்பட ஜவ்வரிசியால், தொழிற்சாலைகளுக்கு, 'சீல்' வைக்கப்படும் போது, நீதிமன்ற அனுமதியின்றி, எந்த தொழிற்சாலையையும் திறக்கக் கூடாது. அவ்வாறு எந்த தொழிற்சாலையாவது சீல் செய்யப்பட்டிருந்தால், அந்த வழக்கையும், இந்த நீதிமன்றத்துக்கு பட்டியலிட வேண்டும்.
அடுத்த முறை விசாரணையின் போதும், நீதிமன்றத்துக்கு உதவ, உணவு பாதுகாப்பு அதிகாரி, டாக்டர் அனுராதா ஆஜராக வேண்டும். விசாரணை, நவ., 17ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment