Jul 11, 2015

வாங்க (கலப்பட) டீ சாப்பிடலாம்!

களைப்பாய் வருகிறது...கண்களில் படுகிறது டீக்கடை. சூடாய் ஒரு டீ. சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டாலும், சுரீர் என்றொரு வலி வயிற்றில் எட்டிப்பார்க்கிறது. அத்தனைக்கும் காரணம் கலப்பட தேயிலைதான். மனிதன் மனசாட்சியே இல்லாமல் செய்யும் கலப்படங்கள் கோடி கோடி.
ஏழைகளும், கீழ்தட்டு, நடுத்தட்டு வர்க்கமும் இந்தியாவில் வாங்கிப் பயன்படுத்தும் தேயிலை கலப்படக் குப்பை என்ற பகீர் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல இடங்களில் அரசு அதிகாரிகளால், குறிப்பாக தமிழ்நாட்டில் நடத்தப்படும் திடீர் சோதனைகளில், இந்த உண்மை வெளியாகி உள்ளது. கலப்பட டீ தொழிற்சாலைகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
தரமான தேயிலைத் தூள் கிலோ ரூ.400 முதல் ரூ.550 வரை விற்கப்படும்போது, தேநீர் கடைகளில் நேரடியாகவே கலப்படத் தேயிலைத் தூள் கிலோ ரூ.220-க்கு விற்கப்படுகிறது. இந்த கலப்பட தேயிலைத்தூள் மூலம் தயாரிக்கப்படும் தேநீர் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மேலும் ரசாயனம் கலந்த சாயப்பொடி என்பதால் ஏராளமான தேநீர் தயாரிக்க முடிகிறது. இதனால் கடைக்காரர்கள் லாபநோக்கத்துடன் கலப்படத் தேயிலையை மட்டுமே வாங்கி கொள்ளை லாபம் பெறுகின்றனர்.
கலப்பட டீ த்தூள் எப்படி தயாரிக்கப்படுகிறது?
@ அரிசி உமியைப் பொடியாக அரைத்து நன்றாக வறுத்தெடுப்பர். பின்னர் சாயப்பொடி (பார்பிராஜின்) எனப்படும் ரசாயனப் பொருளை கலப்பர். 
@ உபயோகப்படுத்திய தேநீர் தூளை நன்கு உலர்த்திவிட்டு, அதில் பெரிய நிறுவனத்தின் தேயிலையை சிறிதளவு கலந்து, பார்பிராஜின் என்ற ரசாயனப் பொருளைக் கலந்து விற்பனை செய்வர்.
@ புளியங்கொட்டையை அரைத்து பொடியாக்கி அதில் பார்பிராஜின் ரசாயனப் பொருளை கலந்து விடுவார்கள்.
@ கிராமங்களில் கிடைக்கும் இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் திக்காகவே இருக்கும்.


@ முந்திரிக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கி, தேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது! இதுதான் இருப்பதிலேயே குமட்டல் வரக்கூடியது.
@ மஞ்சனத்தி இலையைக் காய வைத்து அரைத்து, காய்ந்த குதிரைச் சாணத்துடன் கலந்து தேயிலையுடன் கலப்படம் செய்தால், கண்டே பிடிக்க முடியாதாம்.
இதனால் வரும் பாதிப்பு என்ன?
இதைத் தொடர்ந்து பருகுபவர்கள் நுரையீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, இரைப்பை கோளாறு, மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். கலப்பட தேயிலைத்தூள் விற்றதற்காக, ஆசியா டீ நிறுவனம், தமிழ்நாடு மாநில நுகர்வோர் நல நிதியத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஒரு வழக்கில் உத்தரவிட்டது.
உணவுப் பொருள் கலப்படத் தடுப்புத் துறைக்கு அனைத்து மாவட்டங்களிலும் அலுவலகங்கள் உள்ளன. கடுமையான சட்டமெல்லாம் இருக்கிறது. இந்தக் குற்றத்தை தடுக்க அரசு பெரு முயற்சி செய்ய வேண்டும்
கலப்பட டீ யை கண்டறிவது எப்படி?
மை உறிஞ்சும் தாளில் சிறிது தேயிலையை வைத்து, அதன் மீது சில துளி தண்ணீர் விட்டால், நல்ல தேயிலையின் 'ரெங்' மிக மெதுவாக தாளில் பரவும். கலப்பட தேயிலையின் 'ரெங்' தாறுமாறாய் ஓடும். இது ஈசியான வழி.
மற்றொரு வழி 
கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த நீரை ஊற்றி உங்கள் ஃபேவரைட் கடையின் தேயிலைத் தூளை ஃபிரெண்ட்லியாக வாங்கி, ஒரு சிட்டிகை விடுங்கள். உடனடியாகப் பொன் நிறமாக தண்ணீர் மாறினால் அதுதான் கலப்படத் தூள்! 
தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலை, அதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டு, இவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று… இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டி, ரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். 
இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால், நீரின் நிறம் மாற பத்து நிமிடங்களுக்கும் மேல் ஆகும். 
எச்சரிக்கையாக இருங்கள். அல்லது வெளியே தேநீர் அருந்துவதை அடியோடு தவிர்த்து விடுங்கள்.

No comments:

Post a Comment