Jul 11, 2015

வ.உ.சி., மார்க்கெட்டில் அழுகிய இறைச்சி பறிமுதல்:பெங்களூரு "போட்டி' அதிகாரிகளிடம் சிக்கவில்லை

சேலம்:சேலம், வ.உ.சி., கறி மார்க்கெட்டில், நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தி, சுகாதாரமற்ற மீன், பழைய ஆட்டுக்கால், தலை ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். ஆனால், பெங்களூரு, "போட்டி' (ஆட்டுக்குடல்) அதிகாரிகளின் கையில் சிக்கவில்லை.
சேலம் மாநகர பகுதியில், புற்றீசல் போல ஏராளமான கறிக்கடைகள் உள்ளது. மாநகரில் கறி விற்பனை செய்வதற்கு, பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். ஆனால், 90 சதவீதம் கறிக்கடைகாரர்கள், விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை.
சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகளை, ரோட்டில் வைத்து விற்பனை செய்வது, அதன் கழிவுகளை சாக்கடை, ஓடை ஆகிய பகுதிகளில் கொட்டுவது, பழைய கறியை விற்பனை செய்வது உள்ளிட்ட விதிமீறல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இதில், நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், விதிமீறல்களை கண்டு கொள்ளாததால், சேலத்தில் இறைச்சி விற்பனையில், உரிய வரன்முறை மற்றும் கட்டுபாடு இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, மாநகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதிகளிலேயே, கறி விற்பனையில், பல்வேறு குளறுபடி அரங்கேறி வருவது, பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் வ.உ.சி., மார்க்கெட்டில், பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட பழைய, "போட்டி'(ஆட்டுக்குடல்), கறி ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக, தொடர்ந்து புகார் சென்றது. அதையடுத்து, கலெக்டர் சம்பத், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா தலைமையில், ஒரு குழுவினர் நேற்று காலை, 6.30 மணிக்கு வ.உ.சி., கறி மார்க்கெட்டுக்கு, ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று, புதன் கிழமை என்பதால், கூட்டம் சற்று குறைவாக இருந்தது. மீன் கடைகளில், 22 கிலோ மீன் அழுகிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆட்டு ரத்தம், பழைய ஆட்டுக்கால், தலை என, ஐந்து கிலோவுக்கு மேல் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
இவை அனைத்தையும், சுகாதாரத்துறை அதிகாரிகள், திறந்தவெளியில் உள்ள குப்பையில் கொட்டி அழித்தனர். பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட பழைய, "போட்டி' வகை எதுவும் சிக்கவில்லை. மார்க்கெட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள மாட்டிறைச்சி கடைகளுக்கும் சென்ற அதிகாரிகள், சுகாதாரமான முறையில் கறி விற்பனை செய்ய அறிவுறுத்தினர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது:
ஏற்கனவே, சுகாதாரமற்ற முறையில் கறி விற்பனை செய்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போதும், இவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 15 நாள் கழித்து மீண்டும் ஆய்வுக்கு வரும்போது, தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் கறி விற்பனை செய்வது தெரிய வந்தால், அவர்களது கடை உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
வீட்டில் பதுக்கி வைக்கப்படும் "போட்டி'
பெங்களூருவில் இருந்து ஒட்டு மொத்தமாக வாங்கப்படும், "போட்டி' உள்ளிட்ட இறைச்சியை, வீட்டில் பதுக்கி வைத்து, சிறு வியாபாரிகளுக்கு, பெரும் வியாபாரிகள் சப்ளை செய்து வருகின்றனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். முறையாக பதப்படுத்தப்படாமல் விற்கப்படும், "போட்டி'யால், அதை வாங்கி சாப்பிடும் மக்களுக்கு, பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment