Jun 19, 2015

புளிப்பு பால்பேடா: அரசு நிறுவனமான ஆவினுக்கும் வந்தது சிக்கல்!

கோவை: தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என எதுவும் இல்லாமல், மோசமான தரத்தில் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் பால்பேடா மீது புகார் எழுந்துள்ளது.
மேகி நூடுல்ஸ், நெஸ்லே பால் பவுடர், செர்லக், காம்ப்ளான் என அடுத்தடுத்த உணவு பொருட்கள் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் உணவு பொருளும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.


இது தொடர்பாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத் துறையிடம் ஆவின் நிறுவனம் மீது புகார் தெரிவித்துள்ளார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் புஸ்பானந்தம்.
கோவை, இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் புஸ்பானந்தம். இவர் நேற்று (17-ம் தேதி) தடாகம் ரோட்டில் உள்ள ஆவின் பால் பூத்தில் பால் பேடா ஒன்றை வாங்கியிருக்கிறார். வீட்டுக்கு சென்று சாப்பிட்ட போது, அதன் சுவை புளிப்பாக இருந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து பால்பேடாவின் தரமும் மோசமானதாக இருந்ததை உணர்ந்த புஸ்பானந்தம், அதன் காலாவதி தேதியை பார்த்த போது, அதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என எதுவுமே இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து ஆவின் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கவும், கோவை மாவட்டத்தில் விற்பனையாகும் பால் பேடாவை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.


இது தொடர்பாக புஸ்பானந்தம் கூறுகையில், "நேற்று இரவு தடாகம் ரோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ரூ.40க்கு பால்கோவா வாங்கினேன். வீட்டுக்கு வந்து சாப்பிட்ட போது ரொம்ப மோசமா இருந்துச்சு. இனிப்புக்கு பதிலா புளிச்சது. அதனால சாப்பிடாம அப்படியே வைச்சுட்டு, பாக்கெட்டுல காலாவதி தேதியை சரிபார்த்தேன். ஆனா அதுல விலை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என எதுவுமே இல்லை. எனவே, இதை உடனே தடை செய்யணும். இதை விற்பனை செய்த கடை நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.
ஆனால், இந்த புகார் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அரசு நிறுவனமான ஆவின் மீதான புகார் என்பதால், இந்த புகார் மீது அடிப்படையான நடவடிக்கைகளை கூட அதிகாரிகள் எடுப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
ஆவின் நிறுவன பொருளை எப்படி ஆய்வுக்குட்படுத்துவது? ஆவின் கடையில் எப்படி ஆய்வு நடத்துவது என தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment