Sep 19, 2014

விதிமுறைகளை மீறும் கடைக்காரர்கள் அனுமதியில்லாமல் ஆட்டிறைச்சி விற்பனை

 
காரைக்குடி, செப். 19:
காரைக்குடி, சங்கராபுரம் பகுதிகளில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் வெளியிடங்களில் ஆடுகள் வெட்டி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காரைக்குடி நகர் பகுதியில் 200க்கும் மேற்ப ட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு தினமும் 200க்கு மேற்பட்ட ஆடுகள் வெட்டப்படுகிறன. வார விடுமுறை மற்றும் திருவிழா நேரங்களில் 300 முதல் 500 ஆடுகள் வெட்டப்படும். ஆடுகளை, நகராட்சி, ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆடுவதை செய்யும் கூடத்தில் தான் வெட்ட வேண்டும். இதற்காக கழனிவாசல் பகுதியில் நகராட்சி சார்பில் நவீன ஆடு வதைசெய்யும் கூடம் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆட்டிற்கு நோய் எதுவும் உள்ளதா என கால்நடைமருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பின்னர் வதை செய்யப்பட்டு சீல் வைத்து விற்பனைக்கு அனுப்பப்படும்.
ஆனால் இந்த நடைமுறையை எந்த கடைக்காரர்களும் கடைபிடிப்பது இல்லை. இதனால் பெயர் அளவில் ஒரு ஆட்டை மட்டும் வெட்டி அதற்கு சீல் வைத்து விட்டு, அதற்கு மேல் வெட்டப்படும் ஆடுகளை கடைக்காரர்களே வெட்டி விற்பனை செய்கின்றனர். ஒரு சில கடைகளில் பல்வேறு இடங்களில் திருடி கொண்டுவரும் ஆடுகளை வெட்டி விற்பதாகவும் தெரிகிறது.
தவிர சாலை விபத்து மற்றும் நோய் காரணமாக இறந்த ஆடுகளையும் கடைக்காரர்கள் வெட்டி விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஆடுகளுக்கு நோய் ஏதேனும் இருந்தால் அது மனிதர்களும் பரவ வாய்ப்புள்ளது.
இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், ஆடுவதை செய்யும் இடத்தில் ஆட்டினை வெட்ட குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். இதனை வதைசெய்யும் இடத்தை ஒப்பந்தம் எடுத்தவர்கள் கடைகளுக்கு நேரடியாக சென்று வசூல் செய்துவிடுகின்றனர். இதனால் யாரும் வதைசெய்யும் இடத்திற்கு வராமல் கடைகளிலேயே வெட்டி விற்பனை செய்கின்றனர். இதனை முறைபடுத்த உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment