Sep 19, 2014

உணவுப்பொருள்கள் கலப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா புதிய சட்டம்?


மதுரை: உணவுப்பொருள்களில் கலப்படம் செய்வோரை கடுமையாக தண்டிக்கும் வகையில் மத்திய அரசின் புதிய சட்டம் இல்லை. எனவே பழைய சட்டத்தையே சிறிது காலம் நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது கடுமையாக தண்டிக்கும் வகையில் சட்டவிதிகளை மாற்ற வேண்டும் என உணவுப்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவில் கலப்படம் என்பது இப்போது பெரும் பிரச்னை. 1960ல், முதலாவது உணவுபொருள் கலப்பட தடைசட்டத்தின் திருத்தம் பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டது. என்றாலும் 60 ஆண்டுகாலமாக உணவில் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.இந்நிலையில், 5.8.2011ல் 'உணவுப்பொருள் கலப்படத்தடைச் சட்டம்' முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு, 'உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச்சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டப்படி, நுகர்வோர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் தாங்களே விதிகளை பின்பற்றும் முறைக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இதனால் 'கலப்படம்' என்ற சொல் இச்சட்டத்தில் நீக்கப்பட்டு, தரம் குறைவானது, பாதுகாப்பற்றது என்ற வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன,உணவுப்பாதுகாப்பு மற்றும் நிர்ணயச்சட்டம் 2006 ன் கீழ், 'தரம் குறைவானது' என்பது சட்டத்தில் குறிப்பிட்டுள்ள தரக்குறியீட்டிற்கு குறைவான உணவுப்பொருள்'. 'பாதுகாப்பற்றது' என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்றும், ''தடுப்புக்குறியீடு' என்பது விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது உணவுப்பொருளின் பாக்கெட்டின் மீது தவறான, ஏமாற்றக்கூடிய வாசகங்கள் இருப்பது, ஒரு உணவுப்பொருளை மற்றொரு உணவுப்பொருளாக விற்பது என வரையறுக்கப்பட்டுள்ளது.
அபராதம் என்ன?
தரம் குறைந்த பொருளை விற்பதற்கு, அதிகபட்சமாக ஐந்து லட்ச ரூபாயும், 'தப்புக்குறியீடு' செய்யப்பட்ட உணவுப்பொருளை விற்பதற்கு அதிகபட்சமாக மூன்று லட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது.இதன்படி ஒரு உணவுப்பொருள் 'நல்லெண்ணெய்' என விற்பனை செய்யப்படுகிறது. அதை ஆய்வு செய்ததில், பாமாயில் கலந்துள்ளது தெரிந்தது. ஆய்வின் முடிவு 'தரம் குறைந்தது'ஆகும். அது நல்லெண்ணெய்யே அல்ல, முழுக்க பாமாயில் எனத் தெரிகிறது. இந்த ஆய்வின் முடிவு 'தப்புக்குறியீடு' ஆகும்.இந்த அனைத்து உதாரணங்களும், சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள 'பாதுகாப்பற்ற உணவு' என்ற வரையறைக்குள் வராது. இக்குற்றங்களுக்கு டி.ஆர்.ஓ., கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு குற்றம் புரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வழக்குகளில் சிக்கும் உணவுப்பொருள் கையாளுபவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல், தங்கள் வக்கீல் மூலமாக வழக்கை நடத்தலாம் என புதிய சட்டத்தில் உள்ளது. கடந்த 3 ஆண்டு காலத்தில், டி.ஆர்.ஓ., கோர்ட்டுகள் இவ்வழக்குகளில் ரூ.10 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை தான் அபராதம் விதித்துள்ளன. பழைய சட்டத்தில் கடும் தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள 'உணவுப்பொருள் கலப்படத்தடைச்சட்டம்-1954 ன் படி கலப்பட குற்றத்திற்கு 3 மாத சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் கலப்பட குற்ற வழக்குகள் குற்றவியல் கோர்ட்டில் நடத்தப்படும். தவறு செய்தவர்கள் குறைந்தது 3 முறையாவது கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.ஒரு உணவுப்பொருள் 'தரம் குறைந்தது' என்றால் இயற்கை காரணங்களால் தர நிர்ணயத்திற்கு குறைவானது என கொள்ளலாம். அதாவது, துவரம்பருப்பில் வண்டு துளைத்த பருப்பு கலந்திருப்பது, முதிர்ச்சியடையாத பருப்புகள் இருத்தல், அயோடின் கலந்த உப்பில் அயோடின் அளவு சற்று குறைவாக இருத்தல், பேரீச்சம் பழத்தில் உடைந்த பழங்கள் அதிகம் இருத்தல் ஆகியவை. இந்த மூன்றிலும் இயற்கையாகவே தரம் குறைந்துள்ளதால் 'தரம் குறைவானது' என வரையறை செய்யலாம்.
ஆதாய கலப்படம் ஆனால் தண்ணீர் கலந்ததால் கொழுப்புச்சத்து குறைவான பால், அரிசி மாவில் மஞ்சள்தூள் கலப்பு, பாமாயில் கலந்த நல்லெண்ணைய், ஆவார இலை கலந்த டீத்தூள், எளிதில் ஆவியாகாத வாசனைத்திரவியங்கள் நீக்கப்பட்ட கிராம்பு ஆகிய கலப்படங்கள், ஆதாயத்திற்காக வேண்டுமென்றே செய்யப்பட்டவை. இவற்றையும் 'தரம் குறைவானது' என புதிய சட்டம் வரையறை செய்கிறது.புதிய சட்டம் உணவுப்பொருட்களில் இயற்கையாக ஏற்படும் தரக்குறைவையும், ஆதாயத்திற்காக செய்யப்படும் கலப்படங்களையும் வேறுபடுத்த தவறிவிட்டது.
உணவுப்பொருளை கையாளுபவர்கள் (உற்பத்தி, வணிகம் செய்வோர்) தாங்களே முன்வந்து சட்டவிதிகளை பின்பற்றி, நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவுப்பொருள் வழங்குவர் என்ற எண்ணத்தில், கொண்டு வந்த மிருதுவான புதிய சட்டம் உணவுப்பொருள் கலப்படத்தை முற்றிலும் நீக்கி விடுமா? என்றால் கடந்த 3 ஆண்டுகால அனுபவத்தில் 'இல்லை' என்றே உணவுத்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
'கடுமையானது' என கருதப்பட்ட உணவுப்பொருள் கலப்படத்தடைச்சட்டம்-1954 கலப்படத்தை முற்றிலும் தடுக்கவில்லை. ஆனால் புதிய சட்டத்தில் சில விதிகளுக்கு பின் ஒளிந்து கொண்டு நுகர்வோரை பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் கலப்படகாரர்களை தண்டிக்க போதிய கடுமை இல்லை.
எனவே உணவுப்பொருள் கலப்படத்தை தடுக்கும் விதமாக இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் அல்லது பழைய சட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.
உணவுப்பொருட்களை கையாளும் அனைவரும் லைசன்ஸ் பெற வேண்டும் என்பது புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிய சட்டம் அமலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் பலர் லைசன்சே பெறவில்லை. 4.2.2015 வரை லைசன்ஸ் பெற காலக்கெடு பெற்றுள்ளனர். லைசன்ஸ் பெறவே இத்தனை இழுத்தடிப்பு என்றால் கலப்படம் செய்வோரை தண்டிக்க கடும் நடவடிக்கை இல்லை என்றால் நுகர்வோர் நிலை எதிர்காலத்தில் என்னாவது?

1 comment:

  1. விஞ்ஞான ரீதியாக அமுலாக்கப்பட வேண்டிய சட்டம். ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை கடைபிடிக்க செய்ய வேண்டும். பயிற்சி, விழிப்புணர்வு இல்லாமல் பாதுகாப்பான உணவு சாத்தியமில்லை.

    ReplyDelete