Sep 19, 2014

சேலம் அருகே 20 நாய்கள் சாகடிப்பு குடிநீரில் விஷம் கலந்து மக்களை கொல்வோம் பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் கடிதம்


சேலம், செப். 19
சேலம் அருகே குடிநீரில் விஷம் கலந்து மக்களை சாகடிப்பதுடன், பெண் அதிகாரியின் தலையை துண்டித்து கொலை செய்வோம் என்று மிரட்டல் கடிதம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக பணியாற்றி வருபவர் டாக்டர் அனுராதா. இவருக்கு நேற்று மதியம் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தை படித்து பார்த்த அனுராதா அதிர்ச்சி அடைந்தார். அதில், சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஜீவா நகரில் சுமார் 19 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றுள்ளோம். அதேபோல் 4வது வார்டு மக்களையும் குடிநீரில் விஷம் கலந்து கொல்வோம். இவர்கள் எங்கள் தொழிலுக்கு போட்டியாக உள்ளனர். அனுராதா, உன்னால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். நம்பிக்கை இல்லை என்றால் ஜீவா நகருக்கு நீங்கள் வந்தால் இந்த முகமது ரபீப் பற்றி தெரியும்.
கண்டிப்பாக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் டேங்க்கில் வரும் வாரம் விஷம் கலக்கப்படும். உன்னால் முடிந்தால் தடுத்து பார். எங்களுக்கு எதிரான எந்த இந்துக்கள் இருந்தாலும் அவர்களை உயிரோடு விடமாட்டோம். கண்டிப்பாக ஜீவா நகரில் ஒரு வாரத்தில் பெரிய விபரீதம் நடக்கும். கரட்டில் ஆயுதப்பயிற்சிக்கு இரவு நேரங்களில் வந்தால் நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அதனால் 19 நாய்களையும் முடித்து விட்டோம். தேவையில்லாமல் பிரச்னையில் தலையிட்டால் உன் தலை இருக்காது. நீங்கள் நான் முடிவு செய்ய வேண்டும். இப்படிக்கு, முகமதுரபீப், கே.என்.பட்டி, சேலம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் குறித்து மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம், டாக்டர் அனுராதா தெரிவித்தார். பின்னர் கலெக்டரின் அறிவுரையின் பேரில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாவட்ட எஸ்பி சக்திவேல் ஆகியோரிடம் அனுராதா புகார் அளித்துள்ளார். மேலும் இந்த மிரட்டல் கடிதம், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் கன்னங்குறிச்சி போலீசில் இன்று காலை புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், மிரட்டல் கடிதம் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து ஜீவா நகர் 4வது வார்டு பகுதியில் வருவாய்த்துறையினரும் போலீசாரும் இன்று விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2 நாட்களில் 20 நாய்கள் விஷத்தால் இறந்திருப்பது உறுதியானது. இந்த மிரட்டல் கடிதம் பற்றி கேள்விபட்ட பொதுமக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர்.
100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் அந்த குடிநீர் தொட்டி பகுதியில் இன்று திரண்டனர். அவர்கள் கூறுகையில், மிரட்டல் கடிதத்தில் கூறி இருப்பது போல் எங்கள் பகுதியில் நாய்களை கொன்றுள்ளனர். அடுத்தடுத்து நாய்கள் இறந்ததால் நாய்களை வீட்டில் கட்டி வைத்துள்ளோம். தற்போது மக்களையும் கொன்றுவிடுவதாக மிரட்டி இருப்பதால் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினர்.
இதனிடையே பஞ்சாயத்து 4வது வார்டு கவுன்சிலர் கேசவன் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் குடிநீர்த்தொட்டியில் ஏறி தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் பஞ்சாயத்து பகுதியில் உள்ள குடிநீர்த்தொட்டிகளில் ஊராட்சி காவலாளிகளை பணியமர்த்தி கண்காணிப்பதுடன், பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளோம் என பஞ்சாயத்து தலைவர் பாபு கூறினார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment