Jun 19, 2014

கேன் குடிநீரில் செத்து மிதந்த கொசு

தர்மபுரி, ஜூன் 19:
தர்மபுரியில் அக்ரோ மாவட்ட இயக்குனர் வாங்கிய சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீரில் கொசு செத்து மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் புளோரைடு என்ற நச்சுப்பொருள் நிலத்தடி நீரில் கலந்திருப்பதால், கடந்த ஆண்டு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டம், முழுமையாக இன்னும் பல கிராமங்களுக்கு சென்று சேரவில்லை. இதனால் பொதுமக்கள், ஓட்டல், டீக் கடை மற்றும் வணிக நிறுவனங்களில் குடிநீர் கேன்களை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் மஜீத் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் அக்ரோ மாவட்ட இயக்குனராக உள்ளார். இவர், அங்குள்ள ஒரு கடையில் 20 லிட்டர் குடிநீர் கேனை விலைக்கு வாங்கினார். தண்ணீருக்குள் குப்பை போல் ஏதோ மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் கொசு செத்து மிதப்பது தெரியவந்தது. இது குறித்து அவர், குடிநீர் சுத்திகரித்த நிறுவனத்தை அவர் தொடர்பு கொண்ட போது, தொலைபேசியை யாரும் எடுக்கவில்லை.
இது குறித்து இளையராஜா கூறுகையில்,“தர்மபுரி மாவட்டத்தில் போலி பெயரில் தரமில்லாத, பாதுகாப்பற்ற குடிநீர் கேன், பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்களின் உடல்நிலை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஐஎஸ்ஐ முத்திரையுள்ள குடிநீர் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்“ என்றார்.

No comments:

Post a Comment