Jun 19, 2014

14 ஆலைகளில் நடந்த சோதனையில் ஜவ்வரிசியில் கலப்படம் கண்டுபிடிப்பு குற்றப்பத்திரிகை தயாராகிறது

சேலம், ஜூன் 19:
சேலம் மாவட்டத்தில் கலப்படம் செய்த 14 ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஜவ்வரிசி தயாரிப்பில் மரவள்ளிக்கிழங்கு மாவில் மக்காச்சோளம் மாவை ஜவ்வரிசி ஆலை அதிபர்கள் கலப்படம் செய்து தயாரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த வாரம் சேலம் கலெக்டர் மகரபூஷணம் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முன்னிலையில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள், ஜவ்வரிசி ஆலை அதிபர்கள், ஜவ்வரிசி விற்பனையாளர்கள் கலந்து கொண்ட முத்தரப்பு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் எடுத்துரைத்தனர். அக்கூட்டத்தில் ஜவ்வரிசி தயாரிப்பில் இனி மக்காச்சோளம் கலக்கக்கூடாது என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். அனுராதா சீலநாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்த மான ஜவ்வரிசியில் ஆலை யில் ஆய்வு செய்தார். அப் போது ஜவ்வரிசியில் மக்காச்சோளம் மாவு கலந்து உள் ளதா என்பது குறித்து அதிகாரிகள் மாதிரி எடுத்துள்ளனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். அனுராதா கூறியதாவது:
சேலம் சுற்று வட்டார பகுதியில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 14 ஜவ்வரிசி ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் அந்த நிறுவனங்களில் ஜவ்வரிசி மாதிரி எடுக்கப்பட்டது. இந்த மாதிரிகள் சேலம் உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது. சோதனையில் ஜவ்வரிசியில் கலப்படம் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
மாதிரி எடுத்த ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கொல்கத்தாவில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்தில் மேல் முறையீடு செய்ய, ஒரு மாதம் காலக்கெடு கொடுக்கப்பட்டது. இந்த கால இன்று (20ம் தேதி)க்குள் முடிகிறது. இந்த காலக்கெடு முடிந்தபின் ஆலை உரிமையாளர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஜவ்வரிசி குடோனில் ஆய்வுக்கு சென்றோம். அங்கு நாமக்கல், பெரம்பலூர், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 1987 ஜவ்வரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மூட்டைகளில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டது. இவை உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சோதனையில் ஜவ்வரிசி கலப்படம் செய்து இருப்பது தெரியவந்தால், அந்த ஜவ்வரிசி குடோன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு டாக்டர். அனுராதா கூறினார்.


மக்காச்சோளம் மாவு கலப்பு ஏன்?
தமிழகத்தில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி 75 சதவீதம் ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தான் அதிகளவில் செல்கிறது. 25 சதவீதம் தான் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்கிறது. ஜவ்வரிசி தயாரிப்பில் மரவள்ளிக்கிழங்கு மாவோடு, மக்காச்சோளம் கலக்கப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.50 ஆகும். ஆனால் மக்காச்சோள மாவு ரூ.25 தான். மரவள்ளிக்கிழங்கு மாவைவிட, மக்காச்சோள மாவு விலை குறைவு என்பதால் ஜவ்வரிசி தயாரிப்பில் மக்காச்சோளம் அதிகளவில் கலப்படம் செய்யப்படுகிறது.
மக்காச்சோளம் உடலுக்கு எவ்வித தீமை இல்லை. ஆனால் ஜவ்வரிசி தயாரிப்பில் மக்காச்சோளம் கலப்படம் செய்யும்போது ஜவ்வரிசியின் தரம் குறைகிறது. மேலும் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் உற்பத்தி செய்யும் மரவள்ளிக்கிழங்கு விற்பனை ஆகாது. அதனால் தான் ஜவ்வரிசியில் தயாரிப்பில் மக்காச்சோளம் மாவு கலப்படம் செய்வதை விவசாயிகள் எதிர்க்கின்றனர்.

No comments:

Post a Comment