Jun 25, 2014

சோதனையில் பறிமுதல் செய்யப்படும் புகையிலை பொருட்கள் மீண்டும் அதே கடைகளுக்கு விற்பனை?


திருவள்ளூர், ஜூன் 25:
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, பான்பராக் போன்றவற்றை நகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் நகரில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, பான்பராக் போன்றவை தடையின்றி விற்கப்படுவதாக நகராட்சி ஆணையர் அட்சயாவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நகராட்சி சுகாதார அதிகாரிகள், நேற்று பஜார் வீதி, சி.வி.நாயுடு சாலை, மோதிலால் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த போதை வஸ்துகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்..
இப்படி, நகராட்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்து கொண்டு செல்லப்படும் பொருட்களை நகராட்சி ஊழியர்கள் முறைப்படி எரித்தோ அல்லது பூமிக்கடியில் புதைத்தோ அழிக்க வேண்டும். ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், இப்பொருட்களை மீண்டும் கடைகளுக்கு கொண்டு சென்று குறைந்த விலையில் விற்பதாக நகர மக்கள் கூறுகின்றனர்.
எனவே, பறிமுதல் செய்யப்படும் போதை பொருட்களை முறைப்படி அழிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment