Jun 25, 2014

டெல்லியிலிருந்து சென்னைக்கு கடத்திய 15 லட்சம் புகையிலை பறிமுதல்


வண்ணாரப்பேட்டை, ஜூன் 25:
பேசின்பிரிட்ஜ் அருகே, வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டபோது, அதில் ஏராளமான பண்டல்கள் இருந்தன. அதுபற்றி கேட்டபோது பிஸ்கெட் பாக்கெட் என டிரைவர் தெரிவித்தார். சந்தேகத்தின் பேரில், போலீசார் ஒரு பண்டலை பிரித்து பார்த்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரிந்தது.
அனைத்து பண்டல்களையும் சோதனை செய்ததில், 4.5 டன் எடை கொண்ட புகையிலை இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு 15 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து, புகையிலையுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், டெல்லியை சேர்ந்த லாரி டிரைவர் சத்தம்லால் (30) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், டெல்லியில் இருந்து சவுகார்பேட்டையில் உள்ள ஒரு குடோனுக்கு இந்த புகையிலை பொருட்களை கொண்டு வந்தது தெரிந்தது. பறிமுதல் செய்த புகையிலையை, மாவட்ட உணவு பாதுகாப்பு ஆய்வாளர்களடம் போலீசார் ஒப்படைத்தனர். அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ராட்சத பள்ளம் தோண்டி அழித்தனர். பிடிபட்டுள்ள டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

1 comment:

  1. சென்னை - முக்கிய கடத்தல் வழித்தடமாகியுள்ளது. தொடர் கண்காணிப்பு தேவை

    ReplyDelete