Nov 7, 2014

ஜவ்வரிசியில் கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை


சேலம், நவ. 7:
ஜவ்வரிசியில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயன பொருட்களை கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது. கூட்டமைப்பின் பொருளாளர் ஆடிட்டர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் நல்லசாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், ஜவ்வரிசியில் மக்காச்சோள மாவு போன்றவற்றை கலப்படம் செய்வது நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. அழுக்கை அகற்றவும், மஞ்சள் நிறத்தை போக்கவும் சல்ப்யூரிக் அமிலம் கலக்கப்படுகிறது. கண்ணை பறிக்கும் வெண்மை நிறம் இருந்தால் தான் நல்ல விலைக்கு போகும் என்பதால் துணி சலவைக்கு பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இது ஈவு, இறக்கம் இல்லாத படுபாதக செயல். கேன்சர் போன்ற நோய்களுக்கு நுகர்வோர் ஆளாக்கப்படுகின்றனர். கலப்படம் காரணமாக ஜவ்வரிசி நுகர்வு வெகுவாக குறைந்து போனது. கலப்படம் செய்வோர் மீது அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில்லை. வியாபாரிகள் ஜவ்வரிசி கொள்முதல் செய்யாத காரணத்தால் பலகோடி ரூபாய் மதிப்பிலான ஜவ்வரிசி தேக்கம் அடைந்துள்ளது. இதனால் மரவள்ளிகிழங்கு விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ.10ஆயிரத்திற்கு மேலாக விற்று வந்த நிலை மாறி, இன்று ரூ.2300 என்ற அளவில் அடிமாட்டு விலைக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மரவள்ளி விவசாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment