Nov 21, 2013

கன்னியாகுமரி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல் - ஐஸ்கிரீம், லட்டு, முந்திரிபருப்பு பாக்கெட்டுகள் அழிப்பு

கன்னியாகுமரி, நவ. 21:
கன்னியாகுமரி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி காலாவதி உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட சீசன் கடைகள், ஓட்டல்களில் வியாபாரிகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள், தடை செய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சாலோடீசன் தலைமையில் அதிகாரிகள் ஐயப்பன், சிதம்பரதாணுபிள்ளை, அஜய்குமார், கன்னியாகுமரி பேரூராட்சி சுகாதார அலுவலர் முகைதீன் பிச்சை, இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் ஆகியோர் நேற்று கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஓட்டல்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரி சன்னதிதெரு, வடக்குத்தெரு, திரிவேணி சங்கமம் கடற்கரை, காந்திபஜார் பகுதிகளில் சோதனை நடந்தது. கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பான்பராக், காலாவதியான ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், 20 கிலோ செர்ரி, 5 கிலோ லட்டு, முந்திரிபருப்பு பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். ஓட்டல்களில் கெட்டுப்போன தோசைமாவு, சப்பாத்தி மாவு உள்ளிட்டவற்றை கொட்டி அழித்தனர்.

உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம்
டாக்டர் சீலோ டீசன் நிருபர்களிடம் கூறியதாவது,
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஓட்டல்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் உரிமம் பெறவேண்டும். இதற்காக குமரி மாவட்டத்தில் உள்ள 9 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. டிச. 6ம் தேதி வரை இந்த விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்படும். விண்ணப்பித்தவர்களுக்கு பிப். 4ம் தேதிக்குள் உரிமம் வழங்கப்படும். அதற்கு பிறகும் உரிமம் பெறாத ஓட்டல்கள், உணவு பொருள் விற்பனை செய்யும் கடைகளுக்கு தினமும் ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment