Nov 21, 2013

உணவு பொருள் விற்பனை நிறுவனங்களை பிப்.4க்குள் பதிவு செய்ய வேண்டும் கூடுதல் ஆணையர் தகவல்


காஞ்சிபுரம், நவ. 21:
உணவு பொருள் விற்பனை நிறுவனங்களை பிப்ரவரி 4ம்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கூடுதல் ஆணையர் வாசுகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உணவு பொருள் விற்பனை நிறுவனங்களை பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை கூடுதல் ஆணையர் வாசுகுமார் பேசுகையில், “காலாவதியான உணவு பொருட்களை உடனுக்குடன் கடைகளில் இருந்து அகற்றவேண்டும். தயாரிப்பு தேதி, பயன்பாட்டு காலம் குறித்து எவ்வித தகவலும் இல்லாத பாக்கெட் பொருட்களை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது, விற்பனைக்கு வைத்திருந்தால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அழித்துவிடுவார்கள். இட்லி மாவு, முறுக்கு உள்ளிட்ட குடிசை தொழில் தயாரிப்பு பொருட்களுக்கு இதுபோன்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தரமுள்ள பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்“ என்றார்.
இதையடுத்து நிருபர்களுக்கு வாசுகுமார் அளித்த பேட்டி:
உணவு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு 2006ம் ஆண்டு கொண்டு வந்தது. இச்சட்டம் 2011 ஆகஸ்ட் 5ம்தேதி அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி பெட்டிக்கடை, மளிகைக்கடை, மருந்துக்கடை, தள்ளுவண்டி உணவகம் மற்றும் அனைத்து வகை உணவகங்கள் நடத்துபவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வியாபாரம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் ரூ.100 செலுத்தி தங்களது நிறுவனங்களை பதிவு செய்ய வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யும் நிறுவனங்கள் ரூ.2000 செலுத்தி உரிமம் பெற வேண்டும். பிப்ரவரி 4ம்தேதிக்குள் அனைத்து நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெகநாதனின் 94440 23090 செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு வாசுகுமார் கூறினார். இதில், உணவு பாதுகாப்புத்துறை துணை இயக்குநர் மணிமாறன், காஞ்சிபுரம் மாவட்ட நியமன அலுவலர் ஜெகநாதன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment