Aug 30, 2013

தூத்துக்குடியில் ரூ. 6 கோடி மதிப்பிலான கெட்டுப்போன பட்டாணிப் பருப்பு பறிமுதல்

தூத்துக்குடியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 6 கோடி மதிப்புள்ள கெட்டுப்போன பட்டாணிப் பருப்பை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த குடோனுக்கு "சீல்' வைக்கப்பட்டது.
தூத்துக்குடி-மதுரை புறவழிச் சாலையில் உள்ள "ஸ்கெலைன் அக்ரோ' என்ற ஏற்றுமதி நிறுவனத்துக்கு, ஆஸ்திரேலியாவிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு 3,500 மெட்ரிக் டன் பட்டாணிப் பருப்பு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் கடல்நீர் பட்டதால் கெட்டுப்போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவற்றை விற்க ஏற்றுமதி நிறுவனத்தினர் முடிவு செய்தனராம். இதுகுறித்து ஆட்சியர் எம். ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில், ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், சந்திரமோகன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட குடோனில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
அங்கு 3,500 மெட்ரிக் டன் கெட்டுப்போன பட்டாணிப் பருப்பு இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 6 கோடி எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, பட்டாணிப் பருப்புகளின் மாதிரிகளைச் சேகரித்த அதிகாரிகள், அவற்றை சென்னை கிண்டியில் உள்ள நுண்ணறிவுப் பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பினர். பின்னர், குடோனுக்கு சீல் வைத்தனர்.
"சோதனை முடிவுகள் வந்தபிறகே பட்டாணிப் பருப்புகள் முழுமையாக அழிக்கப்படும்' என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment