Oct 15, 2016

கார வகைகளில் வண்ணம் சேர்க்கக்கூடாது: உணவு பாதுகாப்பு அலுவலர் உத்தரவு

சேலம்: ''கார வகைகளில், வண்ணம் சேர்க்கக்கூடாது,'' என, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா பேசினார்.
சேலம் மாவட்ட பேக்கரி பொருட்கள், காரம் மற்றும் இனிப்பு பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், சிவில் இன்ஜினியர்ஸ் சங்க கட்டடத்தில், நேற்று நடந்தது. இதில், தலைமை வகித்த, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா பேசியதாவது: தீபாவளிக்காக, பேக்கரி பொருட்கள், காரம் மற்றும் இனிப்பு வகைகள், பல மடங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும். அவை தயாரிக்கும் இடம், சுகாதாரமானதாக இருக்க வேண்டும். பதிவு மற்றும் உரிம சான்றிதழ்களின் உண்மை நகலை, பிரதான இடத்தில் பார்வைக்கு வைக்க வேண்டும். தினமும், தரமான கிருமி நாசினி, பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தி, இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். இனிப்பு மற்றும் காரம் தயாரிக்க வாங்கப்படும் மூலப்பொருட்கள், தரமானதாக, கலப்படம் இல்லாதவையாக இருக்க வேண்டும். தயாரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்த வேண்டும். கேக்குகளில் சேர்க்கப்படும் கலர்கள், அனுமதிக்கப்பட்ட அளவுகளில் இருக்க வேண்டும். கார வகைகளில் வண்ணம் சேர்க்கக்கூடாது. இப்பணிகளை செய்பவர்கள், கையுறை, மேலங்கி, தலைக்கவசம், மாஸ்க் ஆகியவை அணிய வேண்டும். உணவு பொருட்களை திறந்த நிலையில் வைக்காமல், ஈக்கள் மொய்க்காமல் பாதுகாப்பு செய்ய வேண்டும். தொற்று நோய் பாதிக்கப்பட்டோர், பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. பயன்படுத்திய எண்ணெய், மீண்டும் உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும்போது, உற்பத்தி தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை அச்சிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment