Jul 21, 2016

1,200 லிட்டர் போலி சமையல் எண்ணெய் பறிமுதல்: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி

நாமகிரிப்பேட்டை: சேலம், நாமக்கல் மாவட்டத்தில், பெட்ரோலிய கழிவில் இருந்து, போலி சமையல் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக, நாரைகிணறு பகுதியில், 1,200 லிட்டர் எண்ணெயை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பெட்ரோலிய குருடு ஆயிலில் இருந்து, 'மினரல் லஸ் ஆயில்' என்ற வாசனையில்லாத, நிறமில்லாத, பசை தன்மையில்லாத, ஒரு வகை எண்ணெய் கிடைக்கிறது. எதற்கும் பயன்படாத இந்த ஆயிலில், சில வாசனை நிறமிகள், ரசாயனம் கலந்து, வீட்டு உபயோக சமையல் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதில், 16 லிட்டர் எண்ணெய் கேனில், சில துளி கெமிக்கல் விட்டாலே, சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய்க்கான மணம் கிடைத்துவிடும். இந்த தொழிலை குடிசை தொழிலாக, நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த நாரைகிணறு மற்றும், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியில், 420க்கும் மேற்பட்டோர் போலி எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் என்று, போலி எண்ணெயை விற்று வந்தனர். இதுகுறித்த விரிவான செய்தி, கடந்த வாரம் வெளியானது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் தலைமையிலான குழுவினர், நேற்று, நாரைகிணறு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, 'சென்னை மளிகை அரிசி மற்றும் ஆயில் மொத்த வியாபாரம்' என்ற பெயரில் சரக்கு ஆட்டோ ஒன்று, நாரைகிணறு பகுதிக்கு வந்தது. இதை பார்த்த குழுவினர், வாகனத்தை சுற்றி வளைத்து விசாரித்தனர். அதில், 74 டின்களில், 1,200 லிட்டர் போலி நல்லெண்ணெய் இருந்ததை பறிமுதல் செய்தனர். சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த தம்மம்பட்டி டிரைவர் யுவராஜ், 35, துறையூரை சேர்ந்த பிரகாஷ், 25, ஆகியோரிடம் விசாரித்தனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: தம்மம்பட்டி அனைத்து வணிகர் சங்க பிரமுகருக்கு சொந்தமான கடையில் இருந்து, நாரைகிணறு முருகன் ஆயில் கடைக்கு, போலி நல்லெண்ணெய் கொண்டு வந்துள்ளனர். அதில், எண்ணெய் எங்கே வாங்கியது, எத்தனை லிட்டர், பில் உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை. எண்ணெய் மாதிரியை எடுத்து, ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். நாரைகிணறு பகுதிக்கு வந்த எண்ணெய் வாகனத்தை அதிகாரிகள் மறித்த போது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். சரக்கு ஆட்டோவை திறக்க விடாமலும், சோதனை செய்ய விடாமலும் தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டதால், விலகிச் சென்றனர். மேலும், தம்மம்பட்டி பகுதியில் உள்ள போலி எண்ணெய் தயாரிப்பு குடோன்களில், சேலம், நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நேற்றிரவு வரை சோதனை நடத்தினர்.

No comments:

Post a Comment