Jul 21, 2016

உணவு பாதுகாப்பு சட்டத்தில் பதிவு செய்யாவிட்டால் ஆக., 4ம் தேதிக்கு பின் நடவடிக்கை என எச்சரிக்கை

ஈரோடு: ''உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் பதிவு செய்யாத, உணவு பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் மீது, வரும், ஆகஸ்ட், 4ம் தேதிக்கு பின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்,'' என, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி தெரிவித்தார்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்துக்கு, அதன் தலைவர் பொன் நாராயணன் தலைமை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி பேசியதாவது: உணவு பாதுகாப்பு சட்டத்தில், தங்களது நிறுவனம் குறித்து பதிவு செய்து கொள்வது வணிகர்களுக்கு நல்லது. ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்கு உள்ளாக தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர், இச்சட்டத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வணிகம் செய்வோர், அதற்கான உரிமத்தை (லைசென்ஸ்) பெற்றுக் கொள்ள வேண்டும். பதிவு மற்றும் உரிமம் பெற, வரும், ஆகஸ்ட், 4ம் தேதி கடைசி நாளாகும். இது, தேசிய அளவில் பொருந்தக்கூடியது. அதன்பின், உரிமம் மற்றும் பதிவு பொறாத நிறுவனங்கள் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொருட்களை பறிமுதல் செய்தல், அந்நிறுவனம் மீது வழக்குபதிவு செய்தல், ஒரு லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் பாயும். மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்பது குறித்து அரசு அறிவிக்கும். இருப்பினும், பதிவு மற்றும் லைசென்ஸ் பெற்று, மேல் நடவடிக்கையை வணிகர்கள் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.
3 மாதம் சிறை சென்ற வணிகர்: ஈரோடு மாவட்டத்தில், 19 ஆயிரம் நிறுவனங்களில், 12 ஆயிரம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. கடந்த, நான்காண்டுகளில் பல்வேறு விதிமீறல் குற்றங்களுக்காக, நீதிமன்றம் மூலம், 19 வழக்கும், டி.ஆர்.ஓ., மூலம், 41 வழக்கும் வணிகர்கள் மீது பதிவாகின. இதில், நீதிமன்றத்தில், நான்கு வழக்கும், டி.ஆர்.ஓ., மூலம் மூன்று வழக்கும் தீர்வாகி, அபராதம் விதிக்கப்பட்டது. அதில், ஒரு வழக்குக்கு மட்டும், வணிகர் ஒருவர், மூன்று மாதம் சிறை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த, 6ம் தேதி முதல், நேற்று வரை, காலாவதியான சாக்லேட், புகையிலை பொருட்கள் என, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment