Oct 18, 2015

தீபாவளி பண்டிகையையொட்டி வியாபார நிறுவனங்களை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உணவு பாதுகாப்பு விழாவில் தீர்மானம்

சேலம், அக்.18- தீபாவளி பண்டிகையையொட்டி வியாபார நிறுவனங்களின் முறையற்ற நடவடிக்கைகளை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உணவு விழா
சேலம் கலெக்டர் பங்களா அருகே உள்ள அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேலம் சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் உலக உணவு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜகோபாலன் முன்னிலை வகித்தார். சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி நுகர்வோர் குழு கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏகாம்பரம் வரவேற்றார்.
உணவு மாதிரிகள்
இதில், தமிழகத்தில் உணவு பகுப்பாய்வு கூடங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும். 
உணவு வியாபாரம் செய்வோர் உரிமம் மற்றும் புதுப்பித்தலை மத்திய அரசு தொடர்ந்து நீட்டித்து வருகின்றது. அதனை மேலும் நீட்டிக்காமல் உணவுப் பாதுகாப்பு தர சட்டத்தில் கூறி உள்ளபடி நிறைவேற்ற வேண்டும்.உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து உணவு மாதிரிகளை எடுத்து 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் முடிவுகளை வெளியிட வேண்டும். மரபணு மாற்ற உணவு உற்பத்தியை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகையையொட்டி வியாபார நிறுவனங்கள் மூலம் வெளியிடப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் முறையற்ற நடவடிக்கைகளை கண்காணித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் பாக்கெட் மூலம் குடிநீர் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் இந்திய உணவு தர நிர்ணய அமைவிட இணை இயக்குனர் தயானந்த் மற்றும் மாணவிகள் ஆசிரியை, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளையராஜா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment